Thirumavalavan: ’’திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா? விசிக எந்த முடிவையும் எடுக்கும்’’- தூள் பறந்த திருமாவளவன் பேச்சு!
எல்லோரும் தேர்தலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாசிச பாஜக அரசு சாதுரியமாகக் காய் நகர்த்தி வருகிறது. இதனை நாம் எதிர்த்தே ஆக வேண்டும்- விசிக.

திமுகவை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை. தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கான முகநூல் நேரலையில் வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் இருந்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
ஏப்ரல் 22ஆம் தேதி கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்
’’22ஆம் தேதி மறுசீரமைப்புப் பணிக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அனைத்து நபர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளால், வர முடியாத சூழல் இருக்கலாம். ஆனாலும் வர வேண்டியது முக்கியம். தவிர்க்கவே முடியாத நிலையில், தலைமையகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
24 மணி நேரமும் தொண்டர்களுடன் இருக்கவே ஆசைப்படுகிறேன். ஆனால் முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வுக் கூட்டப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளது.
குடும்ப நிகழ்ச்சிக்கு அழைப்பதை நிறுத்துங்கள் என்று நிர்வாகிகளுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அது நடைபெறுவதில்லை. ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட விழாக்களுக்கு அழைத்தால் எப்படி வருவது? என்னுடைய உடல் நலனுக்காகக் கூடக் கேட்கவில்லை. கட்சிப் பணிகளுக்காகவே கேட்கிறேன்.
சாதுரியமாகக் காய் நகர்த்தும் பாஜக
எல்லோரும் தேர்தலுக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பாசிச பாஜக அரசு சாதுரியமாகக் காய் நகர்த்தி வருகிறது. இதனை நாம் எதிர்த்தே ஆக வேண்டும்.
தமிழ்நாட்டு அளவில் பாஜக வலிமை பெறக்கூடாது என்று கருதுகிறோம். ஆனால் அவர்கள் ஆக்டோபஸ் கரங்களால் நாடு முழுவதும் பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோமா?
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால் நமக்கு எதிராக, உதிரிகளைக் கொண்டு அவதூறு பரப்புகிறார்கள். திமுகவை மட்டுமே நம்பிக் கிடக்கிறோம் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
இந்த அற்பர்களின் அவதூறுகளை நாம் கடந்து சென்றாலும், இயக்கத்தோழர்கள் அதில் தெளிவு பெற வேண்டும். தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விசிகவால் எடுக்க முடியும். அதுவொன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை.
சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை
எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்திருப்பது, ஒரே நேரத்தில் பலரோடும் பேரம் பேசுவது, பேரல் பலிக்கிற இடத்தில் கூட்டணியைத் தீர்மானிப்பது என்பதெல்லாம் பெரிய ராஜ தந்திரம் இல்லை. அதுவொரு சந்தர்ப்பவாத அரசியல். அதில் நாம் ஈடுபாடு காட்டவில்லை.
எந்த நிபந்தனையும் இல்லாமல் கூட்டணியில் நாம் தொடர, ஒரு துணிவு வேண்டும். தொலைநோக்குப் பார்வை வேண்டும். இதை உணர்ந்து விசிக நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும். எதிர்வினையாற்றும்போது, தலைமையின் உணர்வைப் புரிந்து நடக்க வேண்டும். திமுக கூட்டணியை பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபடுவோரின் உணர்வுகளுக்கு இரையாகாமல், கவனமாக இருங்கள்’’.
இவ்வாறு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

