DMK: திமுக கோட்டையாக மாறிய திருவண்ணாமலை.. சீருடையில் வந்த ஒன்றரை லட்சம் தொண்டர்கள் - பலத்த பாதுகாப்பு
திருவண்ணாமலையில் இன்று நடைபெற உள்ள திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் சீருடையில் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளிலும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள்:
திமுக சார்பில் இன்று திருவண்ணாமலையில் இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் சுமார் 1.5 லட்சம் இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த கூட்டத்திற்காக கடந்த சில தினங்களாக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. இன்று காலை முதல் இந்த கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இளைஞரணி நிர்வாகிகள் திரண்டு வருகின்றனர். சுமார் 1.5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க உள்ள இந்த கூட்டத்திற்காக நாற்காலிகள், உணவுகள், தண்ணீர் பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புகைப்படத்துடன் அடையாள அட்டை:
ஒவ்வொரு நாற்காலியிலும் நிர்வாகிகளுக்கு தேவையான தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள் அடங்கிய பைகளும் அவரவர் இருக்கைகளில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் புகைப்படம் பொருந்திய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு நிர்வாகிகளையும் காவல்துறை பரிசோதனை செய்தே உள்ளே அனுமதிக்கின்றனர். நாற்காலியில் வைக்கப்பட்டுள்ள பைகளில் மிக்சர், ஜுஸ், தண்ணீர் பாட்டில், பிஸ்கட், கடலை மிட்டாய், மைசூர் பாக், விழா அழைப்பிதழ் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள், ஒன்றரை லட்சம் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதால் காலை முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஆயிரக்கணக்கான போலீசார் காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது கட்சி நிகழ்ச்சிகளின் கூட்ட ஏற்பாடுகளை மிகவும் கவனத்துடன் மேற்கொண்டு வருகின்றனர். திமுக-வும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகவும் கவனமாக மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் அமர்வதற்கான இருக்கைகள் தனித்தனியாக பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
தடபுடல் உணவு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக திருவண்ணாமலை மாவட்டம் தொடக்கம் முதலே நிகழ்ச்சி நடக்கும் கூட்டம் வரை திமுக கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. பல இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் பிரியாணி உணவாக வழங்கப்பட்டுள்ளது.




















