தமிழக ஆளுநரை திரும்ப பெற ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை - ஆளுநர் தமிழிசை
தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை - ஆளுநர் தமிழிசை
தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்யும் கருத்துகளுக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருக்கின்றன. மேலும் ஆளுநரை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்பட கூட்டணி கட்சிகள் அனைத்தும் கூட்டாக அறிக்கையும் வெளியிட்டு இருந்தன. அதன் தொடர்ச்சியாக, ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, தி.மு.க. ஜனாதிபதியிடம் முறையிட திட்டமிட்டு இருக்கிறது.
இதுதொடர்பான மனுவில் தி.மு.க. மற்றும் அதனுடன் ஒருமித்த கருத்துகள் கொண்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும் என்று திமுக. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி, அந்த மனுவில் எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழக கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என்று புதுச்சேரி, துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை, “ஆளுநருக்கு அவரது கருத்தை கூற உரிமை உள்ளது. அவரது கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால் அவர் கூறிய ஒரு கருத்துக்காக அவரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது தவறு என்பது எனது கருத்து. யார் வேண்டுமானலும் கருத்து சொல்லலாம். கருத்து சொல்லும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உள்ளது. முதல் குடிமகனுக்கும் உள்ளது. ஆளுநர் அவரது கருத்தை கூறியுள்ளார். இதற்காக அவரை திரும்ப பெற வேண்டும் கூறுவது தேவையில்லாதது. அதற்காக கையெழுத்து போட்டாலும் எதுவும் நடக்கப்போவதில்லை” என்றார்.