Sasikala Case : ”சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை” - உயர்நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம்!
கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ பொதுக்குழுவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ யாருக்கும் அதிகாரமில்லை என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதங்களை முன்வைத்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலா அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகவும், டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்பின்பு, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அதிமுகவில் இருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டில் பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இச்சூழலில், தன்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு நீதியரசர்கள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் என். செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று (நவம்பர் 2) விசாரணைக்கு வந்தது.
சசிகலா தரப்பு வாதம்:
அப்போது சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் டி. ராஜ கோபாலன் ஆஜராகி,” இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலாவை நீக்கியது சட்டவிரோதமானது” என்று கூறினார்.
அப்போது குறிக்கிட்ட நீதியரசர்கள், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி அதிமுகவில் இருக்கிறதா என்றும் அதற்கு விதிகள் உள்ளதா எனவும் கேள்விகளை அடுக்கினர்.
அதற்கு பதிலளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர்,” ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதால் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். எம்ஜிஆர் இறந்த போது இது போன்ற இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அதற்கு பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. கட்சியிலிருந்து சசிகலாவை நீக்கவோ, பொதுக்குழுவில் திருத்தம் செய்யவோ யாருக்கும் அதிகாரமில்லை. பொதுக்குழு மூலம் உறுப்பினர்கள் தான் சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தனர்.
பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக மதுசூதனன், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்மொழிந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தும் தேர்ந்தெடுத்தனர்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
பொதுக்குழு முறையாக நடைபெறவில்லை:
அப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, “பொதுக்குழுவிற்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் உள்ளது.2665 பொதுக்குழு உறுப்பினர்கள் கூடித்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்.
பொதுச்செயலாளர் துணைப்பொதுச்செயலாளர் தவிர பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் மற்றவர்களுக்கு இல்லை. சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது பொதுக்குழு முறையாக நடைபெறவில்லை” என்று வாதிட்டார்.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர்கள் வழக்கின் விசாரணையை நாளை (நவம்பர் 3) ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க: Freedom Fighter Anjalai Amma: தென்னாட்டு ஜான்சி ராணி...அஞ்சலை அம்மாள் சிலையை திறந்து வைத்த முதல்வர்!
மேலும் படிக்க: Couple Murder: திருமணமாகி மூன்றே நாட்கள் - காதல் தம்பதி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் கொடூரம்