எங்களுக்கு அடுத்து உதயநிதி தலைமையில் திமுக தொடர வேண்டும்: திருச்சி சிவா
நீங்கள் சிப்பாய்களாக செல்லவேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் எல்லோருக்கும் எல்லா தகவல்களும் தெரிகிறது. எனவே நம்மை விமர்ச்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
![எங்களுக்கு அடுத்து உதயநிதி தலைமையில் திமுக தொடர வேண்டும்: திருச்சி சிவா The journey of this movement with us should not end but should continue under the leadership of Udayanidhi Stalin எங்களுக்கு அடுத்து உதயநிதி தலைமையில் திமுக தொடர வேண்டும்: திருச்சி சிவா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/25/81c5d5a51b29780f8ee5ff8194c9b4bc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சனாதன தர்மம் காரணமாகத்தான் நம் முன்னோர்கள் படிக்க முடியாமல் இருந்தார்கள், இந்த சனாதன தர்மத்தை தான் தற்போது தமிழக ஆளுநர் தூக்கிப்பிடித்து வருவதாக திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக குழுத்தலைவருமான திருச்சி சிவா எம்பி தூத்துக்குடியில் குற்றம் சாட்டினார்.
திராவிட இயக்கம் குறித்த வரலாற்றை திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக அணி நிர்வாகிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் தோறும் திராவிட இயக்க வரலாறு பயிற்சிப் பாசறைகள் நடத்தப்பட வேண்டுமென திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் வழக்கறிஞர் அணி தகவல் தொழில் நுட்ப அணி விவசாய அணி தொண்டர் அணி உள்ளிட்ட அணிகளின் நிர்வாகிகளுக்கான திராவிட இயக்க பயிற்சிப் பாசறை கூட்டம் தூத்துக்குடியில் அடுத்துள்ள மறவன் மடத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி பாசறையில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக குழுத்தலைவருமான திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்து பேசினார்.
“இயக்கத்தில் அடிமட்டத்தில் மக்களுடன் பழகினாலும் இன்று புதிய தகவல் கிடைக்குமா என்ற ஆவல், திராவிட இயக்க லட்சியம், நோக்கம் பற்றி ஆர்வத்துடன் அறிய காத்து கொண்டுள்ள தோழர்கள் நாளை இயக்கத்தை வழி நடத்தவேண்டியவர்கள். திமுக தலைவர் கலைஞர் இன்று உயிரோடு இல்லை. ஆனாலும் இயக்கம் வீர நடை போடுகிறது. இயக்கத்தை வழி நடத்திச் செல்லும் ஸ்டாலினும் நானும் ஒரே தலைமுறையை சேர்ந்தவர்கள். எங்களோடு இந்த இயக்கத்தினுடைய பயணம் முடிந்து விடக்கூடாது. அடுத்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி என்று தொடர வேண்டும், இளைஞர்கள் அடுத்த தலைமுறை வரவேண்டும்.
திமுக மட்டும் தான் அரசியல் வெற்றியை வென்றெடுப்பது நோக்கமாக கொண்டு செயல்பட்டு கொண்டுள்ளது. நீங்கள் சிப்பாய்களாக செல்லவேண்டும். சமூக ஊடகங்கள் மூலம் எல்லோருக்கும் எல்லா தகவல்களும் தெரிகிறது. எனவே நம்மை விமர்ச்சிப்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். தமிழனை போல் வாழ்ந்தவன் இல்லை, வீழ்ந்தவனும் இல்லை. இந்த இனம், மொழி மீது படையெடுப்புகள் நடந்துள்ளது. மண் மீது மறைமுகமாக படையெடுப்பு நடந்துள்ளது. தமிழ் மட்டும் தான் சமஸ்கிருதத்தை மீறி வாழ்ந்து கொண்டிருக்கிறது.
மாற்று கருத்துகள் இருக்கும் அவர்களை எதிர்கொள்ள நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மொழி, இனம் எது என்பதை தெரிந்தால் தான் நாம் நம்மை தயார் படுத்த வேண்டும். முக்கியமானவற்றை எடுத்து செல்லுங்கள் சமுக நீதி, சனாதன தர்மம் காரணமாகத்தான் நம் முன்னோர்கள் படிக்க முடியாமல் இருந்தார்கள் இந்த சனாதன தர்மத்தை தான் தற்போது தமிழக ஆளுநர் தூக்கிப்பிடித்து வருகிறார்” என குற்றம் சாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)