C. V. Shanmugam: "துணை முதல்வரை காணவில்லை ; யாராவது கண்டுபிடித்து கொடுங்கள்" - சிவி சண்முகம் ஆவேசம்
C. V. Shanmugam: ஆட்சி, அதிகாரம், ஊடகத்தை கையில் வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சி வந்திவிடலாம் என நினைக்கிறது.

விழுப்புரம் : தமிழ்நாட்டின் துணை முதல்வரை காணவில்லை யாராவது கண்டுபிடித்து கொடுங்கள். உதயநிதி ஸ்டாலின் அவரின் துறை மானிய கோரிக்கையில் கூட பங்கேற்கவில்லை. தமிழக அரசின் நிர்வாக திறமையின்மையால் அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் குற்றச்சாட்டு.
மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நாட்டார்மங்கலம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுவையில்:
துணை முதல்வரை காணவில்லை யாராவது கண்டுபிடித்து கொடுங்கள்!
திமுக ஆட்சியில், திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசில் அனைத்து தரப்பு மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு எட்டு மாதம் தான் உள்ளது. எட்டு மாதம் தான் திமுக அரசு ஆயுள் உள்ளது. நான்கு ஆண்டுகளில் திமுக அரசு என்ன செய்தது? சொன்ன ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. இறுதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மக்களுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 42 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் கொடுத்தோம் ஆனால் தற்போது 17 லட்சம் பேருக்கு தான் கொடுக்கப்படுகிறது. துணை முதல்வரை காணவில்லை யாராவது கண்டுபிடித்து கொடுங்கள்.
அதிமுக ஆட்சியில் ஒருமுறைக்கூட வரி உயர்த்தப்படவில்லை
உதயநிதி ஸ்டாலின் அவரின் துறை மானிய கோரிக்கையில் கூட பங்கேற்கவில்லை. அதிமுக ஆட்சியில் இரண்டு முறை விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஒருமுறைக்கூட வரி உயர்த்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் மூன்று முறை வரி உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. மின் கணக்கீடு மாதம் ஒருமுறை எடுக்கப்படும் என கூறினார்கள்,
ஸ்மார்ட் மீட்டரை கொண்டு வந்து நூறு யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்த முயற்சி
ஆனால் ஆட்சி முடியப்போகிறது தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. ஸ்மார்ட் மீட்டரை கொண்டு வந்து நூறு யூனிட் இலவச மின்சாரத்தை நிறுத்த முயற்சி மேற்கொள்கிறார்கள். எட்டு மணி நேர வேலையை திமுக ஆட்சியில் ஒருநாளைக்கு 12 மணி நேர வேலை சட்டத்தை கொண்டு வந்தார்கள். இதனை கண்டித்து பேசியதற்காக என் மீது வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கை சந்தித்து விடுதலை பெற்று வந்துள்ளேன்.
தொழிலாளர் விரோத அரசை விரட்டி அடிக்க வேண்டும். ஆட்சி, அதிகாரம், ஊடகத்தை கையில் வைத்துக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கிறது. எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை ஆனால் ஐந்தரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் தனியார் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது இதற்கு நிர்வாக சீர்கேடு தான் காரணம். தமிழ்நாட்டில் எங்கு சென்றாலும் கஞ்சா கிடைக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த புதிய வேலை வாய்ப்பும் இல்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை.
தூய்மைப்பணியார் போன்ற லட்சக்கணக்கான அரசு வேலைகளை தனியாருக்கு கொடுத்து வருகின்றனர். இரண்டு அமைச்சர்கள் நீதிமன்றத்தால் அடித்து விரப்பட்டுள்ளனர். அதிமுக தொண்டர்களை விலைக்கு வாங்க முடியாது. அதிமுக தொண்டர்களே எட்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. யார் வந்தால் நன்மை செய்வார்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.





















