மேலும் அறிய

CM STALIN LETTER : துபாய் பயணம்.. இதுதான் திட்டம்.. திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

உலகம் முழுவதும் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதே தி.மு.க.வின் லட்சியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, 

" இந்தியாவின் நம்பர்-1 முதல்வர் என்று உங்களில் ஒருவனான எனக்குக் கிடைக்கும் பெருமையைவிட, அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்திட வேண்டும் என்பதே நமது அரசின் முதன்மை நோக்கமாகும். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால இருண்ட ஆட்சிக்காலத்தில் மிக மோசமான பொருளாதாரச் சீரழிவுக்கும் நெருக்கடிக்கும் உள்ளான நமது மாநிலத்திற்கு, கடந்த 10 மாதகாலமாகத்தான் உதயசூரியன் வெளிச்சத்தால் விடியல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பரவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். 

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு எனது முதல் வெளிநாட்டுப் பயணம். இது, தமிழ்நாட்டின் முதலீட்டிற்கானப் பயணம். கடந்த இரண்டு நாட்களாகப் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்குரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதையும், துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் நம் செம்மொழியான தமிழ் வண்ண வண்ண விளக்குகளில் ஒளிர்ந்ததையும், தமிழ்நாட்டின் பெருமை - பாரம்பரியம் - அகழ்வாய்வுகள் காட்டும் தொன்மை ஆகியவற்றின் சிறப்புகள் உலகறிய வெளிப்பட்டதையும், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்களும் தமிழ்நாட்டு மக்களும் அறிந்திருப்பீர்கள். 


CM STALIN LETTER : துபாய் பயணம்.. இதுதான் திட்டம்.. திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

இன்று ஞாயிற்றுக்கிழமை. முக்கிய நிகழ்வுகள் ஏதுமில்லை என்பதால் ஓய்வு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்த நம் தலைவரால் வளர்க்கப்பட்டவன் என்பதால், எதிர்கால வளர்ச்சி குறித்து விளக்கும் கண்காட்சி ஒன்று நடப்பதையறிந்து அதனைப் பார்ப்பதற்காக நமது அரசு அதிகாரிகளுடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். பயண வழியில்தான் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். 

சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான பதிலுரை நிறைவடைந்தவுடனேயே, தமிழ்நாட்டிற்கான முதலீட்டை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார் என எதிர்க்கட்சியினரும் பாராட்டுகிற வகையில் என் கடமையை மேற்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைத்தாலும், பொதுமக்களும் உண்மை நிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும்கூட மனதாரவும் மனதளவிலும் பாராட்டவே செய்கிறார்கள். 

நிதிநிலை அறிக்கைக்கான பதிலுரை முடிந்து, சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெற்றதும், மார்ச் 24 மதியம் 3 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அமைச்சர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் முதலமைச்சரான என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் வெற்றியடைந்திட வாழ்த்துகளைத் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். 


CM STALIN LETTER : துபாய் பயணம்.. இதுதான் திட்டம்.. திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

மாலையில் விமானம் தரையிறங்கியதும், துபாய் அரசு சார்பிலான அதிகாரிகளும், இந்தியத் தூதரக அதிகாரிகளும், அமீரகத் தமிழர்களும் தமிழ்நாட்டு முதலமைச்சரான எனக்கு வரவேற்பு அளித்தார்கள். விமான நிலையத்திலிருந்து, தங்குகிற விடுதிக்கு வந்ததும், தமிழ்நாட்டில் நமது அரசு அமைந்தபிறகு 2000 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ள DP World என்ற புகழ்பெற்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுல்தான் அகமது பின் சுலைமான் அவர்களுடன் இரவு உணவு விருந்து நடைபெற்றது. 

அன்பு கலந்து பரிமாறப்பட்ட உணவை சுவைத்த அதே வேளையில், தமிழ்நாட்டின் நலனே எனது நோக்கமாக இருந்ததால், “எங்கள் மாநிலத்தில் நீங்கள் மேலும் முதலீடு செய்யவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டு, ஏற்கனவே செய்த முதலீட்டினைச் செயல்படுத்துவதற்கு ஏதேனும் இடர்பாடுகள் இருக்கிறதா என்று அவரிடம் கேட்டேன். “எந்தச் சிக்கலும் இல்லை. ரொம்ப சிறப்பாக நடைபெறுகிறது” என்றார். அவரிடம், “புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுவிட்டுக் கணக்கு காட்டும் அரசு இது அல்ல. தமிழ்நாட்டின் உண்மையான தொழில் வளர்ச்சியை முழுமையாக அடைவதுதான் அரசின் இலக்கு” என்றேன். அந்த அடிப்படையில்தான் இரவு விருந்துடனான அந்த சந்திப்பு இனிதே நடந்தேறியது.

மறுநாள், மார்ச் 25 அன்று காலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒன்றிய பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரியை சந்திக்க வந்தேன். அவருடன் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் அரசு அதிகாரிகளும் உடன் வந்தனர். 

இந்தச் சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள வர்த்தக உறவை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழிற்சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவுப் பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் இணைந்து பணியாற்றவும், தமிழ்நாட்டிற்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்குமான பொருளாதார வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 


CM STALIN LETTER : துபாய் பயணம்.. இதுதான் திட்டம்.. திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

சந்திப்பு நிறைவடைந்து திரும்பி வரும்போது நமது அமைச்சர் தங்கம் தென்னரசு என்னிடம், “அண்ணே.. டெல்லியில் ஒன்றிய அமைச்சர்களைத் தமிழ்நாட்டு நலன் சார்ந்து சந்திக்கச் செல்லும்போது வாசலில் எந்த வரவேற்பும் இருக்காது. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்கள் வாசலுக்கு வந்து வரவேற்று அழைத்துச் செல்வது, தமிழக முதலமைச்சரான உங்களுக்குக் கிடைத்த பெருமை” என்று மகிழ்ச்சிப் பொங்கச் சொன்னார்.

என்னுடைய தனிச் செயலாளரும், "பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இங்கு வந்தபோதும், அவர்களுக்குத் தங்களுக்கு வழங்கியதைப் போன்ற காவல்துறை பாதுகப்பு உள்ளிட்டவை வழங்கப்படவில்லை" என்றும், "தங்களைப் போன்று துபாய் அரசு யாரையும் உபசரிக்கவில்லை" என்றும், அங்குள்ள இந்தியர்கள் சொன்னதாகச் சொன்னார். இது தமிழ்நாட்டு மக்களுக்கான பெருமை என்று என் மனம் சொன்னது. 

அன்று மாலையில், துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாட்டு அரங்கைத் திறந்து வைப்பதற்காகச் சென்றபோது, எக்ஸ்போ வளாகத்தையும் பல அரங்குகளையும் காரில் பார்த்தபடியே சென்றேன். உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் ஒரு எக்ஸ்போவை நடத்துவதற்காக, பாலைவனம் போன்ற இடத்தை மிக நேர்த்தியாக மாற்றி அமைத்திருந்த துபாய் அரசு, துபாய் மக்களின் நிர்வாகத்திறனும் உழைப்பும் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அந்த வியப்புடனயே பயணித்த நிலையில், அங்கே ஓர் இனிய அதிர்ச்சி. 


CM STALIN LETTER : துபாய் பயணம்.. இதுதான் திட்டம்.. திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

தமிழ்நாட்டின் புகழை ஆஸ்கர் விருது வாயிலாக உலகமறியச் செய்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நான் வருவதை அறிந்து, தன் மகனுடன் அங்கே எனக்காகக் காத்திருந்தார். தன்னுடைய இசைப் பதிவு ஸ்டுடியோவுக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என அழைப்பு விடுத்தார். நிச்சயம் வருவதாக உறுதியிளித்தேன். 

துபாய் எக்ஸ்போவில் இந்தியா பெவிலியனில், தமிழ்நாடு வாரத்தையொட்டி, தமிழ்நாட்டுக்கான அரங்கைத் திறந்து வைக்கும் நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சகிப்புத்தன்மைத் துறை அமைச்சர் - துபாய் உலகக் கண்காட்சியின் ஆணையர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் பங்கேற்றார். இருவரும் சேர்ந்து அந்த அரங்கத்தைத் திறந்து வைத்தோம். நமது மண்ணின் பண்பாட்டை விளக்கும் பலவிதக் கலைநிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேறியதைக் கண்டு ரசித்தோம். நாங்கள் மட்டுமல்ல, துபாயிலும் அருகில் உள்ள நாடுகளிலும் வாழும் தமிழர்கள் பலரும் நேரில் வந்து இந்த நிகழ்வில் பங்கேற்று, மகிழ்ச்சி ஆரவாரத்தை ஏற்படுத்தினர். கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுடன் நானும் அமீரக அமைச்சரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டபோது,  “இங்கு வாழும் தமிழர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு கண்டு மகிழ்கிறேன்” என்றார் அமீரக அமைச்சர். 

எக்ஸ்போவில் அமைந்துள்ள மற்ற நாடுகளின் பெவிலியன்களில் சிலவற்றை நேரில் பார்க்க விரும்பியபோது, சவுதி அரேபியா நாட்டின் பெவிலியன் அருமையாக இருக்கிறது என்று தெரிவித்தனர். பிரமிப்பூட்டும் வகையில் அந்தப் பெவிலியன் அமைந்திருந்ததை நேரில் பார்த்தேன். வியப்பு விலகாமலேயே, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய ஸ்டுடியோவுக்குச் சென்றேன். ‘மூப்பில்லாத் தமிழே.. தாயே’ என அவர் உருவாக்கியிருந்த ஆல்பத்தை எனக்குத் திரையிட்டுக் காட்டினார். முத்தமிழிறிஞரின் செம்மொழிப் பாடலுக்கு இசை சேர்த்த விரல்கள் ஆயிற்றே.. தமிழுக்கு மற்றொரு அணிகலனாக அவருடைய ஆல்பம் அமைந்திருந்தது. ‘தமிழுக்கும் இசைக்கும் எல்லையே இல்லை’ என ரஹ்மான் அவர்களின் இசைச் சேவையைப் பாராட்டி ட்வீட் செய்தேன். 

எக்ஸ்போவைப் பார்வையிட்ட பிறகு, பேலஸ் டவுன்டவுன் என்கிற இடத்திற்குச் சென்றோம். அங்குதான் உலகின் உயரமான புர்ஜ் கலீஃபா கோபுரம் அமைந்துள்ளது. தமிழின் பெருமை அங்கு காட்சிப்படுத்தப்படுவதைப் பார்ப்பதற்காக அமீரகத் தமிழ் மக்கள் பலரும் திரளாக வந்திருந்தனர். பிறநாட்டு மக்களும் இருந்தனர். தாய்த் தமிழின் பெருமையை உயரத்திலிருந்து உலகத்திற்கு எடுத்துரைக்கும் அந்தக் காணொலிக்கான இசையாக ‘செம்மொழியான  தமிழ் மொழியாம்’ என்ற நம் ஆருயிர்த் தலைவரின் வரிகள் ஒலித்தபோது மெய் சிலிர்த்தது. கண் கசிந்தது. ஆயிரக்கணக்கான கைகள் ஒருசேரத் தட்டி ஒலி எழுப்பின. உள்ளத்தில் மகிழ்ச்சிப் பேரலை அடித்தது. 


தமிழின் புகழ் ஏற்றி வைக்கப்பட்ட அந்த உலகின் உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்று துபாயின் பேரெழிலைக் கண்டேன்.. கண்டேன்.. கண் இமைக்காமல் கண்டுகொண்டே இருந்தேன். பாலைவனமாக இருந்த ஒரு நாடு எத்தனை வளத்துடனும், அழகுடனும், விண்மீன்கள் தரையிறங்கியது போன்ற இரவு விளக்குகளுடனும் ஒளிர்கிறது என வியந்தேன். இலக்கை நிர்ணயித்து, உறுதியுடன் பயணித்தால், நினைத்ததை நிச்சயம் அடைய முடியும் என்பதை அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள முடிந்தது. 

 


CM STALIN LETTER : துபாய் பயணம்.. இதுதான் திட்டம்.. திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!!


மார்ச் 26-ஆம் தேதி காலையில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றேன். அதில் எனக்கு முன்னதாகப் பேசிய மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், “முதல்வர் அவர்களின் 4 நாள் பயணத்தில் 6000 கோடி ரூபாய் முதலீட்டிற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும்” என்று தெரிவித்திருந்தார். அது எனக்குப் பெருமையாக இருந்தது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திட முனைப்போடு பாடுபடும் தொழில்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


‘வணக்கம் துபாய்’ என்று முதலீட்டாளர் மாநாட்டில் என் உரையைத் தொடங்கி,  “2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன்  அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடக்கூடிய வகையில் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த இலட்சிய இலக்கினை அடைவதற்காகப் பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் நீங்கள் எங்கள் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளன. வாருங்கள்.. இதற்கான பயணத்தில் இணைந்து நாம் எல்லோரும் பயனடைவோம்” என அழைப்பு விடுத்தேன். 

மாநாடு நிறைவடைந்தபிறகு, இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் துபாய் முதலீட்டாளர்களுடன் மதிய உணவு விருந்தில் கலந்துகொண்டேன். அப்போது அவர்கள் பலரும் தமிழ்நாட்டைப் பற்றிப் பெருமையாகச் சொன்னது உணவின் சுவையைக் கூடுதலாக்கியது. விருந்து முடிந்து, விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது கவிப்பேரரசு வைரமுத்து அலைபேசியில் அழைத்தார். நிகழ்ச்சிகளை நேரலையில் பார்த்ததைத் தெரிவித்து, ‘உங்களுடைய மணிமகுடத்தில் ஒரு வைரக்கல்தான் இந்தப் பயணம்” என்றார். 


மாலையில் துபாயில் மிக முக்கியமான 4 தொழிலதிபர்களுடனான சந்திப்பு நடந்தது. அங்கும் பல முக்கியப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அந்த நிகழ்வுக்குப் பிறகு, துபாயில் வாழும் தமிழ்ச் சொந்தங்களை சந்திப்பதற்காகப் புறப்பட்டேன். மனதிற்கு மிக நெருக்கமான நிகழ்வு என்பதால் மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. 


கழகத்தின் அயலக அணி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தம்பி டி.ஆர்.பி.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் தம்பி எம்.எம்.அப்துல்லா, துபாய் உடன்பிறப்பு மீரான் ஆகியோர் மற்ற உடன்பிறப்புகளுடன் சேர்ந்து மிகச் சிறப்பாக இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். காரை விட்டு இறங்கியதுமே நம் உடன்பிறப்புகளின் உழைப்பின் வலிமையை உணர்த்தின விழா ஏற்பாடுகள். ஏறத்தாழ 10 ஆயிரம் தமிழர்கள் கூடியிருந்த பிரம்மாண்ட நிகழ்வு. அரங்கிற்குள் வர முடியாமல் வெளியிலும் பல்லாயிரம் பேர் திரண்டிருந்தனர். 


துபாய் சென்றதிலிருந்து பன்னாட்டு நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் கோட் - சூட் உடை அணிந்து சென்று வந்தேன். தமிழ்ச் சொந்தங்களை சந்திக்கும் நிகழ்வு என்றதுமே வழக்கம்போல வேட்டி - சட்டை அணிந்து சென்றேன். என்னை அந்த உடையில் பார்த்ததுமே, முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். “இதுதாங்க சார் ரொம்ப நல்லா இருக்கு” என்றார். உண்மைதானே! கோட் - சூட் அணிந்தால் வெளிப்படும் கௌரவம், கெத்து இவற்றைவிட, வெள்ளை சட்டையும், இருவண்ணக் கரை வேட்டியும்தான் எப்போதும் கெத்து. எந்நாளும் கௌரவம். 


CM STALIN LETTER : துபாய் பயணம்.. இதுதான் திட்டம்.. திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்!!


‘நம்மில் ஒருவர்-நமக்கான முதல்வர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமீரகத் தமிழர்களுடனான சந்திப்பில் இலங்கையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபூக், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் ஆகியோர் பேசினர். துபாய் அரசின் சார்பில் இருவர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். 

நான் எப்போதும் உங்களில் ஒருவன் என்றுதான் எழுதுவேன். இந்தக் கடிதத்தையும் அப்படித்தான் எழுதுகிறேன். என் தன்வரலாற்று நூலுக்கும் உங்களில் ஒருவன் என்றுதான் தலைப்பு. உங்களில் ஒருவன் என்றே நான் எழுதுவதை அந்த நிகழ்வில் சுட்டிக்காட்டி, “நான் உங்களில் ஒருவன் என்கிறேன். நீங்கள் நம்மில் ஒருவர் என்கிறீர்கள். உங்களுடன் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டு, செல்பி எடுத்தபோது அவ்வளவு ஆரவாரம் செய்தனர். என்னுடைய உரையிலேயே, “எதுவும் பேசாமல் உங்களைப் பார்த்துக் கொண்டே இருந்துவிடலாம் என்று தோன்றுகிறது” என்று சொன்னேன். அத்தனை மகிழ்ச்சியை துபாயில் தமிழ்ச் சொந்தங்கள் வெளிப்படுத்தினர். 

“தமிழர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியம். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள். அதே நேரத்தில், நாம் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள். இந்த வாட்டின் வளத்தையும் அறிவையும் தொழில்நுட்பத்தையும் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்யுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும், அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை. அதைப்போல தமிழை - தமிழ்நாட்டை விட்டுவிடாமல் தமிழராய் வாழ்வோம். தமிழை வளர்ப்போம். தமிழரை வளர்ப்போம்” என்று உரையாற்றினேன். நெஞ்சுக்கு நெருக்கமான இந்நிகழ்வினால் நேற்றைய இரவு மிக இனிமையாக அமைந்தது. 

இன்று (மார்ச் 27) மாலை அபுதாபிக்கு சாலைவழிப் பயணம். நாளை அபுதாபியில் உள்ள மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடனான சந்திப்பு, கேரளாவைச் சேர்ந்த மிகப் பெரிய தொழில் - வர்த்தக நிறுவனமான லூலு நிறுவனத்தாரைச் சந்தித்து, அவர்களுடன் மதிய உணவு விருந்து. அமீரகப் பயணத்தில் மிகவும் உறுதுணையாக இருந்தவர் லூலு குழுமத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் எம்.ஏ.யூசுப் அலி அவர்கள்.  தமிழ்நாட்டில் தனது நிறுவனத்தின் சார்பில் முதலீடுகளை செய்வதில் ஆர்வமாக உள்ள அவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அதனைத் தொடர்ந்து, அபுதாபி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்குள்ள தமிழ்ச் சொந்தங்களை சந்தித்து மகிழ்கிறேன். 

தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அரணாக விளங்கும் அரசுதான், தமிழ்நாட்டை ஆளும் கழக அரசு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் கழக அரசு முனைப்புடன் உள்ளது. அமீரகப் பயணம் அதற்கேற்ற வகையில் முழுமையான வெற்றியைத் தந்துள்ளது. கடல் கடந்து சென்றேன். கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றேன். திரைகடலோடித் திரவியம் தேடும் தமிழ்ப் பண்பாட்டின் வழியே பயணித்து, மீண்டும் உங்களை சந்திக்கத் தாய்த் தமிழ்நாடு வருகிறேன்!"

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget