’ஸ்டெர்லைட் ஆலை ஒரு உயிர்கொல்லி – அதை மீண்டும் திறக்க கூடாது’ தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்..!
"வேதாந்தா நிறுவனத்தின் திட்டமிட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிக்கும் வகையில் தமிழக அரசு வாதங்களை முன்வைக்க வேண்டும்!"
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பல்வேறு கட்ட முயற்சிகளில் வேதாந்தம் நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், அதனை திறக்க அனுமதிக்கவே கூடாது என்ற குரல்கள் மீண்டும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எஸ்.டி.பி.ஐ கட்சியும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
எஸ்.டி.பி.ஐ கடும் எதிர்ப்பு - விரிவான அறிக்கை வெளியிட்ட முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி, ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த விசாரணையின் போது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரும் மனு மீது தமிழக அரசின் சார்பில் கடுமையான எதிர்வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
ஸ்டெர்லை ஆலை ஒரு நச்சு - நெல்லை முபாரக்
இந்த விசாரணையின் போது ஸ்டெர்லைட் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டெர்லைட்டை இயக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நடுநிலையான நிபுணர் குழுவை அமைத்து, அந்தக் குழு அளிக்கும் அறிக்கையை வைத்து உத்தரவுகளை பிறப்பிக்கலாம் எனக் கோரிக்கை விடுத்தார். வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக் கொண்டால் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறக்கலாமா வேண்டாமா என முடிவு செய்யலாம் என தெரிவித்திருந்தது. ஏற்கனவே, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அளித்த தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில், நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் குழு ஆய்வு செய்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் கீழும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இப்படியாக பல்வேறு குழுக்கள் ஆய்வு செய்த அறிக்கைகள், ஸ்டெர்லைட்டால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளன.
நிபுணர் குழுவை அமைக்க அரசு அனுமதிக்க கூடாது - எஸ்.டி.பி.ஐ
இந்நிலையில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் ஒரு நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்கிற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை திட்டமிட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது.
தன்னுடைய முடிவில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்க வேண்டும்
ஆகவே, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கைக்கு எதிராக மிக வலுவாக வாதங்களை முன்வைத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு வாதாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதோடு, எந்த காரணம் கொண்டும் உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.