TN BJP President Election: பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார்.?.. யூகங்களுக்கு முற்றுப்புள்ளி.. தேர்தலை அறிவித்த தலைமை...
Tamil Nadu BJP President Election: பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவர் யார் என்ற யூகங்கள் வெளியாகி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தலைவருக்கான தேர்தலை பாஜக தலைமை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சில வாரங்களாகவே, பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது பேசுபொருளாகவே இருந்து வருகிறது. அண்ணாமலை விலகுவது உறுதியாகிவிட்ட நிலையில், தலைவர் பதவிக்கு போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இவர் தலைவராகிறார், அவர் தலைவராகிறார் என்றும் யூகங்கள் அடிப்படையில் செய்திகள் வந்தன. இந்நிலையில், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மாநிலத் தலைவர் பதவிக்கு தேர்தலை அறிவித்துள்ளது பாஜக.
மாநிலத் தலைவர் தேர்தல் - நாளை விருப்ப மனு
இது குறித்த தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டுள்ள பாஜக தலைமை, மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான விருப்ப மனுவை கட்சியின் இணையதளத்தில் இருந்து படிவம் F-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, அதாவது 11-ம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை, தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், விருப்ப மனுவை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள், படிவம் E-ஐ பூர்த்தி செய்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன்மொழிய, மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய விண்ணப்பத்தை வாங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவராக போட்டியிட தகுதிகள் என்னென்ன.?
இந்த தேர்தல் அறிவிக்கையின்படி, 3 பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது 10 வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர்கள் மட்டுமே, மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். இந்த தகுதியை உடையவர்கள், கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரின் எழுத்துப்பூர்வமான பரிந்துரையை பெற வேண்டும்.
தலைவருக்கு போட்டியிடுவதில் அண்ணாமலை, நயினாருக்கு சிக்கல்
இந்த நிபந்தனையின் படி பார்த்தால், அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் சிக்கல் உள்ளது. அண்ணாமலை பாஜகவில் 2019-ம் ஆண்டுதான் இணைந்தார். அதன்படி பார்த்தால், அவர் கட்சியில் இணைந்து 6 வருடங்கள் மட்டுமே ஆகிறது. இதனால், கட்சி விதிகளின்படி அவர் மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாது.
இதேபோல், அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து, தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ள நயினார் நாகேந்திரன், பாஜகவில் இணைந்து 10 வருடங்கள் பூர்த்தியாகவில்லை. அதனால், அவரும் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தகுதியை இழக்கிறார்.
அண்ணாமலை தலைவர் ரேஸில் இல்லை என்பதை ஏற்கனவே அவரே அறிவித்து விட்டார். ஆனால், பாஜக தமிழ்நாட்டின் அடுத்த தலைவராகும் வாய்ப்பு நயினாருக்கே அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அவர் தகுதி இழந்திருப்பதும், பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

