TRB Raja: ”வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்கிறார்கள்” யாரைச் சொன்னார் டி.ஆர்.பி.ராஜா..?
எதிரணியினர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். திமுகவை காப்பாற்ற அடுத்த தலைமுறை தலைவரும் வந்து விட்டார் என்ற கவலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது.
சேலம் கருப்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சேலம் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக முதலமைச்சர் மாற்றியுள்ளார். மற்ற மாநிலங்களுடன் அல்ல, உலகின் மற்ற மாநிலங்களுடன்தான் தமிழகம் போட்டி போடும் அளவிற்கு தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது.
எதிரணியினர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிறார்கள். திமுகவை காப்பாற்ற அடுத்த தலைமுறை தலைவரும் வந்து விட்டார் என்ற கவலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது. மாவட்ட செயலாளர்கள் உறுதியாக உடன் நிற்கும் போது அனைத்து அணிகளும் சிறப்பாக செயல்பட முடியும். வெறுமனே புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் ஐ.டி விங் அல்ல. இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டது ஐடி விங்தான். 40-க்கும் 40 என்று முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா இடத்திலும் ஐடி விங் அணி சிறப்பாக செயல்பட்டது.
ஈவிஎம் சரிபார்ப்பு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்கு சேகரிப்பு, வாக்குச் சாவடி மையத்தில் இருந்து ஈவிஎம் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்றது வரை கண்காணிப்பு என எல்லா பணிகளும் ஐடி விங் சிறப்பாக செயல்பட்டது. சொந்த பணத்தை பயன்படுத்தி தூங்கும் நேரம் தவிர அனைத்து நேரமும் கட்சிக்காக ஐடி விங் செயல்படுகிறது. ஐடி விங் மகளிர் அணியும் சிறப்பாக அனைத்து சகோதரிகளும் செயல்படுகின்றனர் என்றார்.
சேலத்தை புகந்த அமைச்சர்
92 சதவீதம் வருகை தந்துள்ள முதல் மண்டலமாக சேலம் மண்டலம் திகழ்கிறது. கள்ளக்குறிச்சி தொடங்கி அனைத்து மாவட்டங்களிலும் பலரும் வந்துள்ளனர். பொறுப்பு வழங்கி விட்டால் விட்டு விட வேண்டும். பின்னாடி இருந்து நொய் நொய் என பேசக்கூடாது. ஐடி விங் செய்யும் பணி ஒரு கட்சியின் பணியில்லை. மாபெரும் மக்கள் இயக்கமான திமுகவில் ஐடி விங் பொறுப்பில் இருப்பது மிக மிகப் பெருமையானது.
ஐடி விங் போடும் ஒவ்வொரு லைக்-கும் ஒரு இனத்தின் தலையெழுத்து மாற்றம் பெறுகிறது. காலம் முழுக்க குடும்பத்திற்காக உழைத்த மகளிர் வீட்டில் சும்மா இருக்கிறார்கள் என்ற பேச்சு கேட்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காக, நன்றி சொல்வதற்காக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும். உண்மையை உரக்க சொல்லி பணியாற்ற வேண்டும். இனம் வளர்ந்தால் நாம் வளர்வோம் என உணர வேண்டும். அந்த உணர்வு வந்தால் திமுகவைத் தவிர வேறந்த பக்கமும் செல்ல மாட்டார்கள். மற்றவர்களின் பணியை நீங்கள் செய்யக் கூடாது. என் பிள்ளைகள் பர்ஸ்ட் கிளாஸ் பசங்க. நான் சொல்ல வில்லை மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் அறிவாளி அணி என்று சொல்லும் போது பெருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வாக்குசாவடியில் ஐடி விங்க அணி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். பல லட்சம் நிர்வாகிகள் உள்ளனர். உடன் இருப்பவர்களை முழுமையாக நம்ப வேண்டும். ஒரு தடவை சொன்னால் உடனே செய்ய வேண்டியவர்களை நிர்வாகியாக போட வேண்டும் என்று கூறினார்.
முதல்வரே நேரடியாக கண்காணிக்கிறார் - டி.ஆர்.பி.ராஜா
மார்ச் 1 முதலமைச்சர் பிறந்தநாளுக்குள் சொல்லி இருக்கும் பணிகளை முழுமையாக செய்து முடித்திருக்க வேண்டும். எங்கு சென்றாலும் அணி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் சந்தித்துப் பேசி போட்டோ எடுத்து விட்டு செல்கிறார். உங்கள் செயல்பாடுகளை முதலமைச்சரே நேரடியாக பாராட்டுகிறது. ஐடியாலஜியை மறக்காமல் இருக்க வேண்டும். திட்டங்களை மட்டுமல்ல அதைச் சார்ந்த ஐடியாலஜியை விட்டு விடாமல் செயலாற்ற வேண்டும். 10 லட்சம் கோடி பொருளாதாரத்தை முதலமைச்சர் உருவாக்கி வருகிறார். 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை நோக்கி முதலமைச்சர் பணியாற்றி வருகிறார். ஐடி விங் நிர்வாகிகள் தங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்ளக் கூடாது. ஐடி விங் எல்லோருக்குமானவர்கள் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். அனைவருக்கும் சமமாக வைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முத்தவர்களுக்கும் பயிற்சி பாசறை கூட்டங்கள் - அறிவித்தார் அமைச்சர்
மூத்தவர்கள் தொழில்நுட்பம் குறித்து நம்மிடம் கேட்கத் தயங்குகிறார்கள். மார்ச் 1-க்கும் அனைத்து சட்டமன்றத் தொகுதிவாரியாக பயிற்சி பாசறை கூட்டம் நடத்தப்படும். வரலாற்றை திரிக்கிறார்கள். வரலாற்றை மொத்தமாக எரிக்க நினைக்கிறார்கள். இனத்தின் வரலாற்றை ஐடி விங் அணி தூக்கிபிடிக்க வேண்டும். மாவட்ட செயலாளர்கள் பரிந்துரையின் படி பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். இயக்கம் வளர்ந்த வரலாற்றை, கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து கேட்டறிய வேண்டும். கொடியை நட்ட கையை வெட்டிய வரலாற்றை அவர்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வரலாற்றை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு முன்பாக மூத்த நிர்வாகிகளை மதித்து செயல்பட வேண்டும். கட்சியை வளர்த்த பல பேர் பொறுப்பில் இல்லாவிட்டாலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து பேசும் வீடியோ அனுப்ப வேண்டும். அவர்கள் சொன்ன தகவல்களை பதிவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இளைஞர் அணி செயலாளர் மகத்தான ஒரு நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். பேசிப் பேசி வளர்ந்த இயக்கம் திமுக. டீக்கடைகளில் பேசி பேசி இயக்கம் வளர்த்தெடுத்த திமுகவிற்கு புதிய பேச்சாளர்களை துணை முதல்வர் உதயநிதி உருவாக்கியுள்ளார். அவரின் கரத்தை வலுப்படுத்த, அனைத்து தொகுதிகளிலும் குறைந்தது 10 பேச்சாளர்களையாவது ஐடி விங் நிர்வாகிகள் உருவாக்க வேண்டும். அவர்களை பேச வைத்து வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும். இன்றைக்கு யார் யாரோ கண்ட கருமத்தையெல்லாம் பேசுகிறார்கள். அவர்கள் பேசியதற்கு நாம் கருத்து சொல்ல வேண்டியுள்ளது. எல்லோரும் பேச வேண்டும். திமுகவால்தான் நாட்டை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையில் பெரியார், அண்ணா, கலைஞர், முதல்வர், துணை முதல்வரை மனசில் நினைத்து பேசினால் அனைத்தையும் நன்றாக பேச முடியும் என்று பேசினார்.