Ravindranath MP: ரவீந்திரநாத் எம்.பி வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ரவீந்திரநாத் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இது குறித்தான விசாரணைக்குப் பின்னர், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பினால் ஓபிஎஸ் வட்டாரங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணி சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆனால் அவரது வேட்புமனுவில் , சொத்து விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை மறைத்ததாக, தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் பணம் பட்டுவாடா அதிகம் நடப்பதாக புகார் எழுந்த நிலையில், வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியில் பணம் பட்டுவாடா அதிகம் நடந்தும் தேர்தல் தள்ளிவைக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். அதேசமயம் இது தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை ஏற்கக்கூடாது எனவும் ரவீந்திரநாத் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரவீந்திரநாத் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. அதே சமயம் நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையாக விசாரணை செய்யவில்லை எனவும், மேல் முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் இருப்பதாகவும் கூறி உத்தரவு பிறப்பித்தது.
இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. மேலும் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி ரவிந்திரநாத் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ரவீந்திரநாத் மக்களவை உறுப்பினராகத் தொடர்வார்.
அதிமுகவில் ஒன்றை தலைமை விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே விஸ்வரூபம் எடுத்த நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அவரது மகன் ரவிந்திரநாத் உள்ளிட்டோரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனை தொடர்ந்து தேனி எம்.பி ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக என அங்கீகரிக்க கூடாது என அதிமுக சார்பில் மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.