OPS Case: அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு தடைவிதிக்க முடியாது - ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
OPS Case: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு தடைகோரிய ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோரின் மனுவை, ஆரம்ப நிலையிலேயே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
OPS Case: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ. பன்னீர் செல்வம் தரப்பின் மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு:
கடந்த 2022ம் ஆண்டு ஜுலை மாதம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி கட்சியில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், அவருக்கு எதிராகவே அமைந்தன. இதையடுத்து, அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
”அரசியல் வாழ்க்கையே மரணிக்கிறது”
ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் ஜேசிடி பிரபாகர், ஆர் வைத்திலிங்கம் மற்றும் பிஎச் மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தங்கள் தரப்பினரின் அரசியல் வாழ்க்கையின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது. அநியாயமாக தங்கள் தரப்பினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வழக்கில் விசாரணை முடிவடைய ஐந்து ஆண்டுகள் ஆகலாம். காலவரையறையின்றி நாம் முடங்கிக் கிடக்க வேண்டுமா? எந்த அநீதியையும் நீக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்துக்கு உண்டு” என வாதிட்டனர்.
ஆரம்ப நிலையிலேயே மனு தள்ளுபடி:
இதையடுத்து பேசிய நீதிபதிகள், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்தால் பெரும் குழப்பம் ஏற்படும். கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் உருவாகியுள்ள சர்ச்சையை முன்னணி சாட்சியத்தின் மூலம் விசாரணையில் தீர்க்க வேண்டும். ஓபிஎஸ் உள்ளிட்ட 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை நிறுத்தி வைப்பது பல்வேறு சிக்கல்களைத் தூண்டும். தற்போதைய சூழலில் இந்த வழக்கில் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த கட்டத்தில் நாங்கள் இந்த வழக்கில் தலையிட்டால், அது இந்த வழக்கை தொடர் விசாரணைக்கு ஏற்பதற்கு சமமாகிவிடும்.
உட்கட்சி தகராறு மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணை விரைந்து நடைபெற வேண்டும். மனுதாரர்கள் தேவையற்ற ஒத்திவைப்புகளை பெறக்கூடாது எனவும் அறிவுறுத்தினர். இதனைதொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மனுக்களை, ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்து, இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இது ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேநேரம், இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.