சீர்காழி நகராட்சி நகர்மன்றத் தலைவருக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி: 2 ஆண்டாகத் தொடரும் போராட்டம்
சீர்காழி நகர்மன்ற கூட்டத்தில் அனுமதி பெறாமல் சிசிடிவி கேமரா வைத்தது, பினாமி பெயர்களில் நடைபெறும் தரமற்ற பணிகளை கண்டித்தும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 10 பேர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ( திமுக) தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையர் ஹேமலதா, துணைத் தலைவர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு மன்ற பொருள்கள் தீர்மானங்களாக நிறைவேற்றிட வாசிக்கப்பட்டது. அப்போது அதிமுக நகர்மன்ற உறுப்பினர் ரமாமணி, ராஜேஷ் திமுக நகர்மன்ற உறுப்பினர் வள்ளி முத்து ஆகியோர் நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்களின் முன் அனுமதி பெறாமல் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.
எந்த நகராட்சியில் இவ்வாறு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது எனவும், கேமராக்கள் பொருத்திவிட்டு அதற்கு ஒரு லட்சம் செலவீனம் என்ற பொருளில் வைக்கப்பட்டுள்ளது எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். 3 திமுக உறுப்பினர்கள், அதிமுக உறுப்பினர்கள் உட்பட 10 நகர் மன்ற உறுப்பினர்கள் நகர்மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் வெளிநடப்பு செய்த நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமதி மற்றும் ரமாமணி ஆகியோர் கூறுகையில்,
மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் செய்யாத பணிக்கு செய்ததாக மன்றப் பொருள்களில் சேர்க்கப்பட்டுள்ளது. தன்னிச்சையாக யாரையும் கலந்து ஆலோசிக்காமல் சுயநலமாக முடிவெடுத்து அதை செயல்படுத்துகின்றனர். நகராட்சியில் நடைபெறும் 80 சதவீத பணிகளை, பினாமி பெயரில் டெண்டர் எடுத்து செய்கின்றனர்.
இது குறித்து நகர்மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் குறிப்பிட்ட நகர்மன்ற உறுப்பினர்களின் வார்டுகளை மட்டும் திட்டமிட்டு புறக்கணிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். மேலும் 10 நகர மன்ற உறுப்பினர்களும் இதுபோன்று நிலை தொடர்ந்தால் தங்களது பதவியை ராஜினாமா செய்வோம் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்த உள்ளோம் எனவும் கூறினர். இதனால் சீர்காழி நகராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
மேலும் இந்த நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்முதல் நகர்மன்ற தலைவருக்கு எதிராக 10 கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்கள் ரேணுகாதேவி, ரம்யா, வள்ளி ஆகியோர் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர் என மொத்தம் 10 கவுன்சிலர்களும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதியை சந்தித்து புகார் தெரிவித்து, நகர்மன்ற தலைவரின் செயல்பாட்டுக்கு எதிராக அவரைக் கண்டித்து ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்தனர்.
அதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து, நகர்மன்ற உறுப்பினர்கள் மீண்டும் நகர்மன்ற தலைவர் தங்களுக்கு எதிராக செயல்பட்டால் 10 பேரும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று தங்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என எச்சரித்து சென்றனர்.