"பாஜகவை கணிக்க நான் ஞானி இல்லை; திமுக ஆட்சி இப்படித்தான்" -சரத்குமார் ஓபன் டாக்
லாக்கப் மரணம் ஒரு சில காவலர்கள் செய்யும் தவறால் காவல்துறையினருக்கு அவமதிப்பு ஏற்படுவதாகும் கூறினார்.
சேலம் மாவட்டத்திற்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் வருகை தந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகில் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு சரத்குமார் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியது, “பாஜகவின் எட்டு ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல, பாஜகவை நிர்வாகிகள் சிலர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தில், உலகளவில் பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு பாஜக அவர்களை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதை உலகளவிலான செய்தியாக எடுத்துச் செல்ல வேண்டாம் என்பது எனது கருத்து என்று கூறுகிறார். மதவாரியாக கருத்துக்களை யாரும் பேசாமல் இருப்பது நல்லது, உலக நாடுகள் எல்லாம் பார்த்துக் கொண்டுள்ளனர். இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருக்கும் நிலையில், இதனை சீர்குலைக்கும் வகையில் சிலர் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் மதத்தைப் பற்றியும், தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவு செய்யாமல் இருந்தால் நல்லது.
மேலும் சென்னையில் நடைபெற்ற லாக்கப் மரணம் என்பது எதார்த்தமாக நடந்த செயல், அதற்கான விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறது. வேண்டுமென்றே நடந்த செயல் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சிலர் செய்யும் தவறு காவல்துறைக்கு அவமதிப்பு ஏற்படுகிறது. காவல்துறையினருக்கு பல அழுத்தங்கள் இருப்பதால் உயரதிகாரிகள் அவர்களின் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் எடுக்க வேண்டும். திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை, மின்தடை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வருவதற்கு யாரும் காரணமாக இருக்க முடியாது. ஒவ்வொரு இயக்கங்களின் பலவீனம் தான் ஒரு காரணமாக இருக்க முடியும்” என்றும் கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சியை வலிமைப்படுத்தும் சீர்படுத்தும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய சரத்குமார், தமிழகத்தின் பண அரசியலை ஒழித்தால் மட்டுமே இங்கு அரசியல் நடத்த முடியும். இந்த நிலை மாறினால் மட்டுமே அனைவரும் அரசியல் பண்ண முடியும் என்றார். தமிழகத்தில் போதைப் பொருள்களை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தவறு செய்பவர்களே திருந்தினால் மட்டுமே இதை தடுக்க முடியும், ஒருசிலர் செய்யும் தவறினால் இந்த சமுதாயம் சீர்குலையும் என்பதைப்பற்றி உணராமல் உள்ளனர். அவர்களை போன்ற ஒரு காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.