Stalin's Plan: மனோ தங்கராஜ் ரீ என்ட்ரி.. ஸ்டாலின் போட்ட கணக்கு.. தேறுமா வாக்கு.?
தமிழக அமைச்சரவையில் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் மனோ தங்கராஜ். இதற்கு பின்னணியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பக்கா பிளான் இருப்பதாக சொல்கின்றனர்.

தமிழ்நாடு அமைச்சராக மனோ தங்கராஜ் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதன் பின்னணியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கணக்கு ஒன்று உள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன கணக்கு.? அது பலிக்குமா.? அலசுவோம்.
தேர்தலை குறி வைத்து அமைச்சரவையில் மாற்றம்.?
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் தான் தற்போது இருக்கும் தமிழ்நாடு அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்கள் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், நேற்று இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுப்பும் வெளியானது. அதாவது, அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்படுவதாகவும், மனோ தங்கராஜ் புதிதாக அமைச்சரவையில் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு நடந்து வரும் சூழலில், அமைச்சர் பதவியில் தொடர வேண்டுமா இல்லை ஜாமீன் வேண்டுமா என்பது குறித்து அவரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், தன்னுடைய அமைச்சர் பதவியை துறந்துள்ளார் செந்தில் பாலாஜி.
அதேபோல், தொடர்ந்து ஆபாசமாகவும் சர்ச்சைக்குறிய வகையிலும் பேசி வந்த அமைச்சர் பொன்முடி, அண்மையில் பெண்கள் குறித்து கீழ்த்தரமாக பேசிய சம்பவத்திற்கு, தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அது போதாது, அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்த சூழலில், மூத்த அமைச்சராக இருப்பவரை எப்படி நீக்குவது என்ற நீண்ட யோசனைக்கு பிறகு, ஒருவழியாக, நீங்களாகவே ராஜினாமா செய்து விடுங்கள் என்று பொன்முடியிடம் ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், அவரும் தன்னுடைய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஒருவர் மட்டும் ரீ என்ட்ரி.. பிரித்து கொடுக்கப்பட்ட மற்ற துறைகள்
அந்த வகையில், செந்தில் பாலாஜி நிர்வாகித்து வந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை, அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பொன்முடி வகித்து வந்த வனத்துறை, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இச்சூழலில் தான், யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை அமைச்சரவையில் கொண்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கியுள்ளார். அவருக்கு மீண்டும் பால்வளத்துறை பொறுப்பு வழங்க்கப்பட உள்ளது.
மனோ தங்கராஜ் அமைச்சரானதற்கு பின்னால் உள்ள கணக்கு
ஏற்கனவே அமைச்சரவரையில் இருந்து நீக்கப்ப்பட்ட மனோ தங்கராஜுக்கு, அவர் கடந்த முறை வகித்த அதே பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தென் மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால், அது சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக அமையும் என்றும், மோடிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தீவிரமாக பேசி வரும் மனோ தங்கராஜுக்கு அமைச்சர் பதவி வழங்குவதன் மூலம், கன்னியாகுமரி பகுதியில் சிறுபான்மையினரின் வாக்கு விஜய்-க்கு செல்வதை தடுக்க முடியும் என்று நோக்கிலும் தான், அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த முறை அமைச்சரவையில் பொறுப்பு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால், பல்வேறு கட்சிகளும் தேர்தல் கணக்குகளை போட்டுவரும் நிலையில், ஆளும் கட்சியான திமுகவும் பல்வேறு கணக்குகளை போட்டு, காய் நகர்த்தி வருகிறது. இந்த முறை மு.க. ஸ்டாலின் போட்டுள்ள கணக்கு பலிக்குமா.? குமரியில் அவருக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்குமா.? பொறுத்திருந்து பார்க்கலாம்...





















