’’வெட்கப்படுங்க ஸ்டாலின்’’ பாலியல் புகாரளித்த மாணவி விவரங்களை வெளியிடுவதா? சாடிய அண்ணாமலை!
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள்

தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். தலைநகர் சென்னையில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க மாணவர்கள் போட்டாபோட்டி போடுவர்.
அத்தகைய பெருமை வாய்ந்த பல்கலை. வளாகத்திலேயே முன்பின் தெரியாத நபர் ஒருவரால், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அத்துடன் மாணவி குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
இந்த சம்பவத்துக்கு பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், மாநிலத் துணைத் தலைவர் கரு நாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.
தனிமனித உரிமை மீறல் மட்டுமல்ல; சட்டவிரோதச் செயல்பாடு
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையில் இருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலினே முழு பொறுப்பு.
திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின்’’.
இவ்வாறு அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!






















