(Source: ECI/ABP News/ABP Majha)
Abp Nadu Exclusive: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, உள்ளாட்சித் தேர்தல், பிரதமர் முதல்வர் சந்திப்பு - மனம் திறந்த செல்வப் பெருந்தகை
Selvaperunthagai Mla Interview: காவல்துறை இது தொடர்பாக புலன் விசாரணை செய்து வருகிறார்கள். இதில் சில பேர் அரசியல் செய்யலாம், ஆதாயம் தேடலாம் என வாய்க்கு வந்ததை கூறி வருகிறார்கள் .
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ, ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு , பிரத்யேக பேட்டி அளித்திருந்தார். அவர் அளித்த பேட்டி பின்வருமாறு :
கேள்வி : உங்களுக்கே காவல்துறையால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என பரமக்குடியில் நீங்கள் ஆவேசமாக பேசினீர்கள். தமிழ்நாட்டில் காவல்துறையின் செயல்பாடு எப்படி உள்ளது ?.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை : தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக உள்ளது. இப்போது மூன்று ஆண்டுகளாக திறமையாக காவல்துறையினர் செயல்படுகின்றனர். எந்த மொழியில் சமூகவிரோதிகளுக்கு, சொல்ல வேண்டுமோ அந்த மொழியில் சொல்லி வருகிறார்கள். ராமநாதபுரத்தில், இமானுவேல் அவர்களின் நினைவு நாளன்று சென்றபோது , ஒரு குறிப்பிட்ட பகுதியில் அந்த பிரச்சினை ஏற்பட்டது. அதனால் சலசலப்பு ஏற்பட்டது, இதை பிரச்சினையாக்க வேண்டாம் என அமைதியாக வந்து விட்டோம். இனி இந்த குளறுபடி நடைபெறக்கூடாது என காவல்துறைக்கு கோரிக்கை வைத்தோம்.
கேள்வி : உங்களுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ராகுலுக்கு கடிதம் எழுதியது ஏன் ? அவரை யாரும் இயக்குகிறார்களா ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை : இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. காவல்துறை இது தொடர்பாக புலன் விசாரணை செய்து வருகிறார்கள். இதில் சில பேர் அரசியல் செய்யலாம், ஆதாயம் தேடலாம் என வாய்க்கு வந்ததை கூறி வருகிறார்கள். பேச வேண்டிய இடம் சொல்ல வேண்டிய இடம் காவல்துறை, யாருக்கு வேண்டும் என்றாலும் சந்தேகம் வரலாம். ஆனால் சொல்ல வேண்டிய இடம் மீடியா அல்ல , சொல்ல வேண்டிய இடம் எங்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களிடம் அல்ல , காவல்துறையிடம் சொல்ல வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இது குறித்து பேச விரும்பவில்லை. ஒரு நாள் இது குறித்து முழு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. அன்று உங்களையும் அழைக்கிறேன் .
கேள்வி : பாஜக-வை கடுமையாக எதிர்ப்பதாக திமுக தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில், விழாக்களுக்கு மத்திய அமைச்சரை அழைப்பது, பிரதமரை முதல்வர் நேரில் சந்திப்பது எல்லாம் எதற்காக ? உண்மையிலேயே திமுக பாஜகவை கடுமையாக எதிர்க்கிறது என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை : ஒருபோதும் திமுக பாஜகவை நோக்கி நகராது. தேசம் என்பதே வேற்றுமையில் ஒற்றுமை தான் தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை, தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி, இதையெல்லாம் பெறுவதற்காக முதலமைச்சர் முயற்சி எடுத்து வருகிறார். இரண்டாம் கட்ட மெட்ரோ பணி, நீதி ஒதுக்கவில்லை, வரலாறு காணாத மழை பெய்த போதும் , முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்ட போதும் ஒரு நயா பைசா கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. ஜிஎஸ்டி தொகையில் முழுமையான பங்களிப்பை தரவில்லை , தமிழ்நாட்டின் உரிமைகளை பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரை சந்திப்பது இயல்பு. எங்களுக்கு சேர வேண்டிய பங்களிப்பை தாருங்கள் என தான் முதலமைச்சர் சென்றார்
கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் 20% இடங்களை திமுகவிடம் கேட்டு காங்கிரஸ் கட்சி வாங்க முடியுமா ?
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை : உள்ளாட்சித் தேர்தலில் முதலில் வரட்டும் அதன் பிறகு பேசுவோம் என தெரிவித்தார்.
முதல் பகுதி பேட்டியை படிக்க: Exclusive: “திமுக ஆட்சியில் பங்கு?” மனம் திறந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!