Seeman: காங்கிரஸை கூட்டணியில் இருந்து நீக்கினால் திமுகவிற்கு ஆதரவு - ட்விஸ்ட் கொடுத்த சீமான்..!
மக்களவைத் தேர்தலில் ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிட்டால் நான் விலகி திமுகவுக்கு ஆதரவு தருவேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
Seeman: வரும் மக்களவைத் தேர்தலில் ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி) மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிட்டால் நான் விலகி திமுகவுக்கு ஆதரவு தருவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதற்கு திமுக தனது கூட்டணியில் இருந்து காங்கிரஸை நீக்கினால் முழு ஆதரவும் அளிப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் மோடியை எதிர்த்து திமுக போட்டியிடாவிட்டால் தான் நேரடியாக களமிறங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமேஸ்வரம் தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடி களமிறங்கினால் அவரை எதிர்த்து சீமான் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தயாராகும் பணியில் கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினரை தயார் படுத்தும் நோக்கில் ஆலோசனைக் கூட்டங்களையும் பொதுக்கூட்டங்களையும் சீமான் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசுகையில், நான் ராமேஸ்வரம் தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடப்போவதாக தெரிவித்தேன். ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 5 இடங்களில் பாஜக இங்கு போட்டியிட்டது. அதில் திமுக 4 இடங்களை கூட்டணி கட்சியினருகு ஒதுக்கி கொடுத்துவிட்டு, தூத்துக்குடியில் மட்டும் தமிழிசையை எதிர்த்து திமுக போட்டியிட்டது. பாஜகவை எதிர்த்து அனைத்து இடங்களிலும் திமுக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்தது ஏன்? பாகவை அழிக்க நினைக்கும் திமுக பாஜகவை நேரடியாக எதிர்த்து போட்டியிடவேண்டியது தானே? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இப்போது கூட ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் அங்கு திமுக நேரடியாக களமிறங்கினால், அந்த தொகுதியில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். மேலும் அந்த தொகுதியில் திமுகவிற்கு முழு ஆதரவு தருகிறேன். காங்கிரஸை விட நாம் தமிழர் கட்சி பெரிய கட்சி” எனவும் அவர் பேசியுள்ளார்.
இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவித்தால் திமுகவிற்கு முழு இந்த பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்தார். மேலும் காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்கினால் திமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்
திடீர் திமுக ஆதரவு?
திமுகவை மேடைதோறும் விமர்சித்து வந்த சீமான் தற்போது திடீரென திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு வேரு எதாவது அரசியல் காரணம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.