சசிகலாவை பாஜகதான் இயக்குகிறது.. மீம்ஸால் வைரலான வெண்மதி பகிரங்க குற்றச்சாட்டு!
சசிகலாவையே பாஜகதான் இயக்குகிறது என்று அவரது தீவிர ஆதரவாளரான வெண்மதி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர் சசிகலாவிடம் இருந்தும் விலகியுள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தமிழ்நாட்டை ஆட்சி செய்த முன்னாள் ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி மோதலால் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது.
சசிகலா ஆதரவாளர் வெண்மதி விலகல்:
அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி செயல்பட்டு வந்தாலும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் என்று கட்சியில் அவருக்கு சவால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வெண்மதி தற்போது சசிகலா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் சசிகலாவிடம் இருந்து விலகியுள்ளார். இவர் கடந்தாண்டு சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் அருகில் நின்று அளித்த முகபாவனைகள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது. இவர் தனியார் யூ டியூப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
வருந்தத்தக்க நிகழ்வுகள்:
நானும் சசிகலா வர வேண்டும் என்றுதான் காத்திருந்தேன். அவர்கள் வந்த பிறகு அவர்களுடன் இணைந்து பணியாற்றினேன். சசிகலா சுற்றுப்பயணத்தை திருநெல்வேலி, தென்காசியில் தொடங்குவதாக இருந்தது. அதற்கான பணிகளை எனக்கு கொடுத்து இருந்தார்கள். அந்த வேலை நல்லபடியா நடந்தபோது சில வருந்தக்கத்த நிகழ்வுகள் எனக்கு அரசியல் ரீதியாக நடந்தது.

சசிகலா ஒரு பெரிய தலைவர். ஜெயலலிதாவோட 33 ஆண்டுகள் பயணித்தவர். அவங்க எனக்கு ஒரு குரு. இந்த சூழலில் சிலரின் நெருக்கடியால் நான் அமைதியாக வேண்டியதாக உள்ளது. சசிகலா சிலரால் சூழப்பட்டார். எனக்கு அங்க அங்கீகாரம் இருக்காது என்று நான் அமைதியாகிவிட்டேன்.
சசிகலா பாதையில் உடன்பாடில்லை:
கடந்தாண்டு ஜுன் மாதம் வரை அவரது பாதையில் எனக்கு உடன்பாடு இருந்தது. அதன்பின்பு, அவர் போன பாதையில் எனக்கு உடன்பாடு இல்லை. அதிமுக தமிழக மக்களின் ரத்தத்தில் கலந்தது. சசிகலா ஆக்ரோஷமான அரசியல் பண்ணவில்லை என்பதுதான் எனது வருத்தம். எம்ஜிஆர் மக்களிடம் சென்று நியாயம் கேட்டார். அதை ஏன் அவர் பண்ணவில்லை? பாதிக்கப்பட்டவரே நியாயத்தை கேட்கவில்லை?
எல்லாருக்கும் ஈகோ:
யாரால் இந்த கட்சி பிரிந்தது? எடப்பாடி பாஜக-விற்கு நன்றி கடன்பட்டுள்ளேன் என்றார். பிரிவுக்கே அவங்கதானே காரணம். ஓபிஎஸ் குருமூர்த்தியைத்தான் சொன்னார். யார் அந்த குருமூர்த்தி? அதிமுக-வி்ற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? செங்கோட்டையன் ஏன் டெல்லி போனார்? ஏன் எல்லாரும் டெல்லி போறீங்க? எடப்பாடிக்கு ஈகோ, எல்லாருக்கும் ஈகோ. யாருக்கும் ஈகோ வேண்டாம். எடப்பாடி நினைக்க வேண்டும். நம்மை யார் என்ன செய்வார்கள்?

சசிகலா அந்த ஒரே ஒரு ப்ரஸ்மீட்டில் மட்டும்தான் சொன்னார்கள். நானே அதை அதிர்ச்சியில்தான் பார்த்தேன். அவரை குறித்து பேசினார். சசிகலாவிற்கு பயம் இல்லை. ஆனால், அவர்களை சுற்றியிருப்பவர்கள் அவர்களுக்கு தவறாக வழிநடத்துகின்றனர்.
கஷ்டம்:
சசிகலாவிற்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அவர் சென்ற பாதை சரியாக இருந்தது. அவர் செல்லும் பாதை என்று மாறியதோ, அப்போது நம்பிக்கை விட்டுப்போனது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும். அவர் அனைவரையும் வெளியேற்றிக் கொண்டிருக்கிறார். சேர்க்க வேண்டியதுதானே? பேசிக்கொண்டிருந்தால் எப்படி சேர்க்க முடியும்?
சசிகலாவை பாஜக இயக்குகிறது:
உங்களை ஏன் இந்த அம்மா காப்பாற்ற மாட்டார்கள் என்று கேட்கிறார்கள். ஏன் சரி செய்யமாட்டேங்கிறார்? என்று கேட்கிறார்கள். சசிகலா அனைத்து முயற்சிகளும் செய்தார்கள். வெற்றி நெருங்கியது. 2025 மார்ச், ஏப்ரலுக்குள் செட் ஆகிவிடும் என்று நம்பினேன். ஜுன் மாதத்திற்கு பிறகு கஷ்டம் என்று தெரிந்தது. தவறான வழிகாட்டுதல் சென்றது. சசிகலா பாஜக-வை இயக்குகிறது. அனைவரையும் பாஜக இயக்குகிறது.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
வெண்மதியின் இந்த பேட்டி தற்போது சசிகலா ஆதரவாளரையும், அதிமுக தொண்டர்களையும் அதிரவைத்துள்ளது.






















