Sasikala: ஓபிஎஸ் என்னிடம் பேசினாரா? தொடர்பில் சில தலைவர்கள்.. சசிகலா பரபரப்பு பேட்டி!
ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் பேசினாரா? என்று வெளிப்படையாக சொல்ல முடியாது என்று சசிகலா நிருபர்களிடம் கூறியுள்ளார்.
சென்னையில் சசிகலா நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
சசிகலா..
"அ.தி.மு.க.வில் சரியான தலைமை இல்லை. மாவட்ட வாரியாக தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்க்கிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அவர்கள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்று கூறுகின்றனர். அவர்களிடம் அம்மாவின் ஆட்சியை விரைவில் அமைப்போம் என்று கூறினேன்.
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும். தொண்டர்கள் என்ன நினைக்கின்றனரோ அதுதான் வெற்றி பெறும். அ.தி.மு.க. பொதுக்குழு கூடினாலும் அவர்களால் ஒரு கருத்துக்கு வர முடியாது. தொண்டர்கள் அவர்கள் பக்கம் இல்லை. எல்லாரும் எனக்கு எதிராக பேசவில்லை. ஒரு சிலர் பேசுகின்றனர். அதுவும் பதவிக்காக பேசுகின்றனர். என்னை அ.தி.மு.க.வில் இணைக்க முடியாது என்று சொல்ல இவர்கள் யார்? தொண்டர்கள்தான் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும்.
செயல்படாத அதிமுக...
மக்களின் கருத்து அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்பதுதான். நான் வர வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கருத்து. நிறைய இடங்களில் பெரியளவில் கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதற்கு நிர்வாகம் சரியாக செய்யவில்லை என்பதுதான் காரணம். முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் போலீஸ் துறை உள்ளதா? அ.தி.மு.க.வை மீட்பதற்கு எடுத்த முடிவு பின்னடைவு என்று சொல்ல முடியாது. அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.
அம்மா ஒரு முறை திறந்தார்கள் என்று, நாமும் திறக்க வேண்டும் என்று மேட்டூர் அணையை திறந்துள்ளனர். அடுத்த மாதம் 20-ந் தேதிக்குள் தூர்வாரும் பணியை திறக்க வேண்டும் செயல்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், தண்ணீரை மேட்டூரில் இருந்து திறந்துவிட்டால் தூர்வாரும் பணி நடைபெறுமா? தூர்வாரும் பணியே நடைபெறவில்லை. வரும் காலத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று 100 சதவீத நம்பிக்கை உள்ளது" என்றார். பின்னர், அவரிடம் நிருபர்கள் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மதிப்பு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிய பிறகு தொடர்பு கொண்டாரா? என்று நிருபர்கள் கேட்டதற்கு " அதை இவ்வளவு நபர்கள் முன்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது" என்று சசிகலா கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்