‛என் பாரத்தை நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன்... புறப்படுகிறேன்’ -சசிகலா பேட்டி!
அதிமுகவையும் தொண்டர்களையும் தலைவரும்(எம்.ஜி.ஆர்., அம்மாவும்(ஜெயலலிதாவும் ) காப்பாற்றுவார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, ஜெ., மறைவுக்குப் பின் சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்றார். இதற்கிடையில் அதிமுகவின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி-ஓபிஎஸ் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர், செயல்படுகின்றனர். இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, அதிமுகவை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. அவர் எதிர்பார்த்த ஆதரவு கட்சியில் கிடைக்காததால் தேர்தல் சமையத்தில் ஒதுங்கியிருப்பதாக அறிக்கை விட்டார் சசிகலா.
தேர்தல் நிறைவுபெற்று, அதிமுக தோல்வியை தழுவிய பின் மீண்டும் அரசியல் பிரவேசத்தை தொடங்கிய சசிகலா பல்வேறு முயற்சிகளை முன்வைத்தார். ஆடியோ வெளியீடு, தொண்டர்கள் சந்திப்பு என அவர் செய்த அத்தனை முயற்சியும் அதிமுகவை கைப்பற்ற பலனளிக்கவில்லை. இந்நிலையில் அதிமுக பொன்விழா ஆண்டை கொண்டாட அதிமுக தலைமை முடிவு செய்து, அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியது. அதே நேரத்தில், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் தனது காய் நகர்த்தும் பணியை முன்னெடுக்க தயாரானார் சசிகலா. தோல்வியை காரணம் காட்டி தொண்டர்களை அரவணைக்கலாம் என்பது அவரது திட்டம்.
அதற்காக இன்று சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவின் நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தச் சென்றார் சசிகலா. சிறைக்கு சென்று சசிகலா திரும்பிய போது, அப்போது ஆளும் அரசாக இருந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, நினைவிடத்திற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் சசிகலா அங்கு செல்ல முடியாமல் தவித்தார். தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் முறையான அனுமதி பெற்று, இன்று மெரினா சென்றார். அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பின்னர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் சசிகலா பேசியதாவது:
‛‛ஏன் நான் நினைவிடத்திற்கு தாமதமாக வந்தேன் என உங்களுக்கும் மக்களுக்கும் நன்றாக தெரியும். கடந்த 4 ஆண்டுகளாக என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை நினைவிடத்தில் இறக்கிவிட்டேன். அம்மாவும் தலைவரும் மக்களுக்காக தொண்டர்களுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். அம்மாவிடம் நடந்த விசயங்களை நான் பகிர்ந்தேன். அவர்கள் வளர்த்த கட்சிக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று சொல்லி விட்டு தான் வந்துள்ளேன். அதிமுகவையும் தொண்டர்களையும் தலைவரும்(எம்.ஜி.ஆர்., அம்மா(ஜெயலலிதாவும் ) காப்பாற்றுவார்கள். அந்த நம்பிக்கையோடு நான் புறப்படுகிறேன்...’’ என்றார்.
அதன் பின் தொண்டர்கள் படைசூழ அங்கிருந்து புறப்பட்டார்.