அடேங்கப்பா... சசிகலா குடும்ப சொத்து மதிப்பு இவ்வளவா...? தலைசுற்ற வைக்கும் ரிப்போர்ட்!
173 சொத்துக்கள் ஜெயலலிதா, சுதாகரன், இளவரசி பெயரில் வாங்கப்பட்டு இருப்பதாக அவருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு தெரிவிக்கிறது.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கை தமிழ்நாடு அரசு கையில் எடுத்ததில் இருந்து அது குறித்த பேச்சுக்கள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின்பும், தமிழ்நாடு அரசியல் கோடநாட்டை மையப்படுத்தியே நகர்ந்து வருகிறது. அப்படி என்ன இருக்கிறது கோடநாட்டில்? ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு என்ன? இதில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் இருக்கும் சொத்துக்கள் எவை என்ற கேள்விகள் நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும். அதற்கான பதில்களை தி வீக் ஆங்கில இதழ் கள ஆய்வு நடத்தி வெளியிட்டு உள்ளது.
ஜெயலலிதா 2016 தேர்தல் பிரமாண பத்திரத்தில் தனது சொத்து மதிப்பு ரூ.113.73 கோடி என குறிப்பிட்டு உள்ளார். அதே சமயம் அவருக்கு நெருக்கமான சசிகலா குடும்பத்தினர் பெயரில் பல ஆயிரம் கோடி மதிப்பில் சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டு உள்ளதாக வீக் இதழ் தெரிவித்து உள்ளது.
இதில் பெரும்பாலான சொத்துக்கள் ஜெயலலிதா முதல் முறை முதலமைச்சராக பதவி வகித்த 1991 முதல் 1996-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாங்கப்பட்டதாகும். அதாவது 173 சொத்துக்கள் ஜெயலலிதா, சுதாகரன், இளவரசி பெயரில் வாங்கப்பட்டு இருப்பதாக அவருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு தெரிவிக்கிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி நல்லம்மா நாயுடு, தி வீக்கிடம் தெரிவிக்கையில், ”பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3,000 ஏக்கர்கள் சொத்துக்கள் 6 நிறுவனங்களின் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் மைக்கேல் டி. குன்ஹாவின் தீர்ப்பையும், ஜெயலலிதாவுக்கு எதிரான ஆதாரங்களையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.” என விளக்கி இருக்கிறார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அவருக்கு தொடர்பு உடையதாக குறிப்பிடப்பட்டு உள்ள சொத்துக்கள் குறித்தும் வீக் இதழ் ஆய்வு மேற்கொண்டிருக்கிறது.
கோடநாடு எஸ்டேட்:
942 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தேயிலைத் தோட்டத்தின் மதிப்பு ரூ.1,115 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், இதில் சிறிய அளவிலான பங்கு மட்டுமே ஜெயலலிதாவின் பெயரில் உள்ளது.
கட்டிடங்கள்:
- சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தின் மொத்த பரப்பளவு 24,000 சதுர அடி. அதன் மொத்த மதிப்பு ரூ.90 கோடி
- ஐதராபாத் அருகே செகந்திராபாத்தில் உள்ள 7,009 சதுர அடி பரப்பளவு கொண்ட ஆடம்பர வீட்டின் மதிப்பு 15 கோடி
- 3,600 சதுர அடி கொண்ட போயஸ் கார்டனில் உள்ள வணிக கட்டிடத்தின் மதிப்பு ரூ.7.8 கோடி
- சென்னையில் உள்ள 790 சதுர அடி கொண்ட பிளாட்டின் மதிப்பு ரூ.1.7 கோடி
- சென்னையில் உள்ள 1,206 சதர அடி பரப்பளவு கொண்ட வீட்டின் மதிப்பு ரூ.1.4 கோடி
போயஸ் இல்லத்தில் இருந்த பொருட்களின் மதிப்பு:
- அங்கு இருந்த வாகனங்களின் மதிப்பு ரூ.42 லட்சம் என்று வீக் தெரிவித்து உள்ளது.
- ரூ.5.8 கோடி மதிப்புள்ள 21.3 கிலோ தங்கம், ரூ.5.2 கோடி மதிப்புள்ள 1,250 கிலோ எடையுள்ள ஆபரணங்கள்.
- 2,140 சேலைகள், 750 காலணிகள், 91 ஆடம்பர கைக்கடிகாரங்கள், 500 கிரிஸ்டல் பாத்திரங்களின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஜெ, சசிக்கு தொடர்புடைய 6 நிறுவனங்கள்:
- 1,190 ஏக்கர்கள் பரப்பளவு கொண்ட ரிவர்வே ஆக்ரோ பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி.
- சிக்னோரா பிசினஸ் நிறுவன சொத்து மதிப்பு ரூ.126 கோடி
- 200 ஏக்கர் கொண்ட மீடோ ஆக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.100 கோடி
- லெக்ஸ் பிராபர்டி டெவலப்மண்ட் நிறுவன சொத்து மதிப்பு ரூ.99.7 கோடி
- இந்தியா தோஹா கெமிக்கல்ஸ் நிறுவன சொத்து மதிப்பு ரூ.86.9 கோடி
- 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ் நிறுவன சொத்து மதிப்பு 40 கோடி
விவசாய நிலங்கள்:
- ஐதராபாத் அருகே உள்ள ஜீடிமெட்லா கிராமத்தில் அமைந்து உள்ள 14.50 ஏக்கர் விளைநிலத்தின் மதிப்பு ரூ.14.50 கோடி
- செய்யூரில் உள்ள 3.43 ஏக்கர் விளை நிலத்தின் மதிப்பு ரூ.34 லட்சம்
முதலீடுகள்:
- சென்னையில் உள்ள பல வங்கி கணக்குகளில் ரூ.10.64 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது
- நமது எம்.ஜி.ஆர். நாளிதழை நடத்தி வரும் ஸ்ரீ ஜெயா பதிப்பகத்தில் ரூ.21 கோடி முதலீடு
- நமது எம்.ஜி.ஆர். நாளிதழை அச்சிட்டு வந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ரூ.20 லட்சம் முதலீடு
- கோடநாடு எஸ்டேட்டில் ரூ.3.13 கோடி முதலீடு
- ராயல் வேலி ஃபுளோரிடெக் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் ரூ.40 லட்சம் முதலீடு
- கிரீன் டீ எஸ்டேட்டில் 2.20 கோடி முதலீடு
சசிகலா குடும்பத்தின் சொத்துக்கள்:
- இளவரசியின் மகன் விவேக் பெயரில் உள்ள 11 திரைகளை கொண்ட சென்னையின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஜாஸ் சினிமாவின் மதிப்பு மட்டும் ரூ.1,000 கோடி என தி வீக் குறிப்பிட்டு உள்ளது
- தமிழ்நாட்டின் மிகப்பெரிய மதுபான நிறுவனமான மிடாசின் சொத்து மட்டும் ரூ.400 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
- சென்னை அருகே ஓ.எம்.ஆர். சாலையில் சிறுதாவூரில் அமைந்துள்ள 115 ஏக்கர் நிலம் மற்றும் பங்களாவின் மதிப்பு ரூ.100 கோடி
- ஜெயா டிவியை நடத்தி வரும் மேவிஸ் சாட் காம் நிறுவனத்தில் ஜெயலிதா நேரடியாக தலையிடாமல் சசிகலாவை வைத்து இயக்கியதாகவும் தி வீக் குறிப்பிட்டு உள்ளது.