OPS vs EPS: அதிமுக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு - ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர் இடையே வாக்குவாதம்
ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர் இடையே கடும் வாக்குவாதம். இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சேலம் மாநகர உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகார்.
சேலம் மாநகர் சுகவனேஸ்வரர் திருக்கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் அணியின் சார்பாக வைத்திலிங்கம் தலைமையில் இன்று மாலை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓபிஎஸ் பணியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான பணிகளில் ஓபிஎஸ் அணியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வந்த நிலையில், அதிமுக கட்சி கொடிக்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் நிர்வாகிகள் ஓபிஎஸ் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது மற்றும் அதிமுக சின்னத்தை பேனரில் பயன்படுத்தக் கூடாது என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்டுவதற்காக வைத்திருந்த அதிமுக கொடியை பிடுங்கி எடுத்துச் சென்றதால் இரண்டு தரப்பு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோதல் தீவிரமாகும் சூழல் இருந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் கொடி கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதையடுத்து சேலம் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் வருகை தந்து அதிமுக கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று புகார் மனு அளித்தனர். நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி, தேர்தல் ஆணையமும் சின்னத்தை ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி புகார் மனு அளித்துள்ளனர். இதற்கான ஆவணத்தை மாநகர காவல் உதவி ஆணையாளர் உதவியாளரிடம் வழங்கினார். இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சேலம் மாநகர காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அதிமுக தனக்கு சொந்தம் என்று கூறிக்கொண்டு குண்டர்களை அழைத்து வந்து பிரச்சனையில் ஈடுபடுவதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்