’ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுகவில் இணைக்கப்படுவாரா?’ - எஸ்.பி.வேலுமணி அளித்த பதில் என்ன?
ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து தற்போது அவரது மகனும், அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினருமான ரவிந்திரநாத் உள்ளிட்ட 18 பேர் கட்சியியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அக்கட்சியில் பல்வேறு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோவைக்கு வருகை தந்த எஸ்.பி.வேலுமணிக்கு கோவை மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா ஆசியுடனும், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடனும் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பொதுச்செயலாளராக வேண்டுமென கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். நான்கு ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி மக்கள் எதிர்பார்த்த திட்டங்களை தந்து அற்புதமான ஆட்சி நடத்தினார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
31 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமென மக்கள் முடிவு செய்து விட்டனர். அதற்கு ஒற்றைத் தலைமை வேண்டும். கடந்த ஒராண்டு காலமாக எந்த வேலையும் நடக்கவில்லை. ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி தந்த திட்டங்கள் தான் ஒராண்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களாட்சி வர எடப்பாடி முதலமைச்சராக வர வேண்டுமென தமிழ்நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளார்கள். எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய அரும்பாடு பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக அற்புதமான ஆட்சியை தந்தவர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திட்டங்களை செயல்படுத்தியவர். வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து பணியாற்றுவோம். கடந்த சட்டமன்ற தேர்தலை போல வருகின்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் 100க்கு 100 வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களைக் மீண்டும் இணைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு, ”அது குறித்து பொதுச்செயலாளர் மற்றும் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” என பதிலளித்தார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி கே. பழனிசாமி, பொறுப்பேற்றவுடனேயே ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கினார். தற்போது அவரது மகனும், அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினருமான ரவிந்திரநாத் உள்ளிட்ட 18 பேர் கட்சியியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்