Russia-Ukraine War: அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போருக்குத் தீர்வு: தாலிபான்கள் வலியுறுத்தல்
அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே ரஷ்யா - உக்ரைன் போருக்குத் தீர்வு காண வேண்டும் என்று தாலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே ரஷ்யா - உக்ரைன் போருக்குத் தீர்வு காண வேண்டும் என்று தாலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று அறிவித்தார். அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகர் மீது, மற்ற சில பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான சேதம் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகித்து வருகிறது.
உக்ரைன் மீது குண்டு மழை பொழியும் வீடியோக்களும், அதிரும் கட்டிடங்களின் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 ராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 316 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் நடத்திய பாதுகாப்புத் தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், 30க்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகள், ஏழு ரஷ்ய விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்றைய தாக்குதலை தொடர்ந்து இன்று ரஷ்யா, உக்ரைனில் 2வது நாள் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
உக்ரைன் ராணுவம் சண்டையிடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்யா திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே ரஷ்யா - உக்ரைன் போருக்குத் தீர்வு காண வேண்டும் என்று தாலிபான்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் அமீரக வெளியுறவுத் துறை அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''உக்ரைனில் நிலவும் சூழலைஆப்கானிஸ்தான் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்குள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறித்து கவலை கொள்கிறோம்.
வன்முறையை அதிகப்படுத்தும் முடிவுகளை இரு தரப்புமே எடுக்கக்கூடாது. இந்த விவகாரத்தில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் அமீரகம் நடுநிலைத் தன்மையுடனான வெளியுறவுக் கொள்கைகளைக் கொண்டுள்ளது. அதன்படி, இரண்டு தரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேபோல உக்ரைனில் படிக்கும் ஆப்கன் மாணவர்கள் மற்றும் அகதிகளின் பாதுகாப்பான இருப்பை உறுதிப்படுத்துவதில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்''.
இவ்வாறு தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்