ஆளுநர் ரவி மீது கடுப்பில் இருக்கும் பாஜக தலைமை.. தமிழகத்திற்கு விரைவில் நல்ல செய்தி காத்திருக்கு?
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், அவருக்கு மட்டும் கெட்ட பெயரை வாங்கி தருவது மட்டுமில்லாமல் பாஜக அரசுக்கும் பெரும் சங்கடத்தை தரும் வகையில் அமைந்திருக்கிறது என பாஜக தலைவர்கள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, தமிழக ஆளுநர் விரைவில் மாற்றப்படலாம் என பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் திமுக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், சமீபத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மாநில அரசுக்கு ஆதரவாகவும் ஆளுநருக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. இதையடுத்து, டெல்லியில் அண்மையில் சந்தித்த பாஜக மூத்த தலைவர்கள், இந்த தீர்ப்பு குறித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். நீதிமன்றம் தனக்கான எல்லையை மீறிவிட்டதாக சில பாஜக தலைவர்கள் கருதினாலும், ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் குறித்து பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் விரைவில் மாற்றப்படலாம் என பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஆளுநர் vs மாநில அரசு:
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே கடும் அதிகார போட்டி நிலவி வருகிறது. மேற்குவங்கம், கேரளா, தெலங்கானா தொடங்கி தமிழ்நாடு வரை இந்த பட்டியல் நீள்கிறது.
மேற்குவங்கத்தில் ஆளுநராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர், மம்தா அரசுடனும் கேரளாவில் ஆரிப் முகமது கான் பினராயி விஜயன் அரசுடனும் தெலங்கானாவில் தமிழிசை சௌந்தரராஜன் கே. சந்திரசேகர் ராவ் (தற்போது அரசு மாறிவிட்டது) அரசுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர். இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், மேல்குறிப்பிடப்பட்ட அனைத்து ஆளுநர்களும் மாற்றப்பட்டுவிட்டனர்.
ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவராகிவிட்டார். ஆரிப் முகமது கான், பீகாருக்கு மாற்றப்பட்டுவிட்டார். தமிழிசை சௌந்தரராஜன், மீண்டும் தமிழ்நாடு அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், திமுக அரசுக்கு தொடர் குடைச்சலை தந்து வந்த ஆளுநர் ஆர்.என். ரவி மட்டும் மாற்றப்படவில்லை.
பாஜகவுக்கு சங்கடத்தை தந்த நீதிமன்ற தீர்ப்பு:
இந்த நிலையில்தான், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆளுநர் ரவிக்கு மிகப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.
ஆளுநரின் செயல்கள், அரசியலமைப்புக்கு எதிரானது என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு ஆளுநருக்கும் மட்டும் இன்றி குடியரசு தலைவருக்கும் கால அவகாசம் நிர்ணயித்தது. துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான இந்த வழக்கில் மாநில அரசின் முடிவே இறுதியானது எனக் கூறி, ஆளுநரின் அதிகாரங்களையும் வரையறுத்துள்ளது.
சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமலேயே மசோதாக்கள் சட்டமானது. தமிழ்நாடு அரசு தொடர்பான வழக்குக்கு மட்டும் இன்றி பல மாநில அரசுகள் தொடர்பான வழக்குக்கும் இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமையும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே, இது ஆளுநருக்கு மட்டும் இன்றி மத்திய அரசுக்கும் பெரும் சங்கடத்தை தந்துள்ளது. ஜே. பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகிய நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மாற்றப்படுகிறாரா ஆளுநர் ஆர்.என். ரவி?
இதற்கிடையே, அண்மையில் டெல்லியில் சந்தித்த பாஜக மூத்த தலைவர்கள், இந்த தீர்ப்பு குறித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். தனக்கான எல்லையை உச்ச நீதிமன்றம் மீறிவிட்டதாக சில பாஜக தலைவர்கள் கருதினாலும், ஆர்.என். ரவியின் செயல்பாடுகள் குறித்து பலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், அவருக்கு மட்டும் கெட்ட பெயரை வாங்கி தருவது மட்டுமில்லாமல் பாஜக அரசுக்கும் பெரும் சங்கடத்தை தரும் வகையில் அமைந்திருக்கிறது என பாஜக தலைவர்கள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, தமிழக ஆளுநர் விரைவில் மாற்றப்படலாம் என பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தொடர் பின்னடைவை சந்தித்த பிறகும் கூட, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூலம் பிரச்னையை தீர்க்க ஆளுநர் ரவி முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவேதான், மதுரையில் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, மாணவர்களை ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வைத்து, பாஜகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆளுநர் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுநரின் முயற்சிகள் அவருக்கு பலம் அளிக்குமா அல்லது தமிழ்நாட்டுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.




















