மேடையில் அசிங்கப்படுத்திய இபிஎஸ்: கோபத்தின் உச்சியில் ஆர்.பி.உதயகுமார்: டென்சனில் ஜெயக்குமார்?
EPS- RB Udayakumar: அதிமுக கட்சியினுள் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், தற்போது ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் இபிஎஸ்-க்கு எதிராக திரும்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த உடனேயே, தன்னை அவமதித்தாக கருதி ஈபிஎஸ் மீது ஆர்.பி. உதயகுமார் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி அதிமுக கட்சியில், மேலும் ஒரு புதிய புகைச்சலை கிளப்பியுள்ளது.
மேடையிலிருந்து இறக்கிவிடப்பட்ட ஆர்.பி.உதயகுமார்:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தார். அப்போது பாஜக அதிமுக இடையிலான கூட்டணி அறிவிப்பை அமித்ஷாவும் இபிஎஸ்-ம் இணைந்து கூட்டாக அறிவித்தனர் . இந்த நிகழ்வின் போது அமித்ஷா, இபிஎஸ் உடன் எஸ்பி வேலுமணி, கே.பி. முனுசாமி, ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் மேடையேறினர். ஆனால் போதிய இருக்கைகள் இல்லாததால், மேடையில் இருந்து ஆர்பி உதயகுமார் கீழே இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கோபமடைந்த ஆர்பி உதயகுமார் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இபிஎஸ் மீது ஆர்பி உதயகுமார் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Also Read: Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?
கோபத்தில் ஆர்.பி உதயகுமார்:
மேலும் அன்று மாலை செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு இபிஎஸ் இல்லத்தில் அமித்ஷாவிற்கு விருந்து நடைபெற்றது. அதிலும் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த 2021 தேர்தலுக்கு பிறகு, அதிமுக மூத்த தலைவர்களை அண்ணாமலை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இந்நிலையில், அண்ணாமலை மீது கடுமையான அதிருப்தியில் இருந்தனர் அதிமுகவினர். இதன் காரணமாகத்தான் அதிமுக பாஜக கூட்டணி முறிந்ததாகவும் சொல்லப்பட்டது. மேலும், அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிட போவதாகவும் அண்ணாமலை தெரிவித்தது, அதிமுகவினருக்கு கடும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அதன்பிறகு அண்ணாமலை இபிஎஸ் என இருவரும் மாறி மாறி பொதுவெளியில் விமர்சித்து வந்தனர். அப்போது ஈபிஎஸ் க்கு ஆதரவு குரல் கொடுத்த அதிமுகவினரில் ஆர்பி உதயகுமாரின் பங்கு இன்றியமையாதது. சட்டப்பேரவையில்கூட இருவரும் அருகருகேதான் அமர்ந்திருந்தனர். இப்படி இருக்கையில் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைந்தவுடனேயே, தன்னையே இபிஎஸ் ஓரம்கட்டி விட்டதாக ஆர்.பி உதயகுமார் கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஆரம்பத்தில் இருந்தே இபிஎஸ் மீது சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக முக்குலத்தோர் சமூகத்தினரை வேண்டுமென்றே அவர் ஒதுக்கிவருவதாகவும் பலர் குற்றம்சாட்டியுள்ளனர். ஓபிஎஸ், சசிகலா, தினகரனை தொடர்ந்து தற்போது ஆர்பி உதயகுமாரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதும், மேலும் மேடையில் இபிஎஸ் உடன் அமர்ந்திருந்த கேபி முனுசாமி, எஸ் பி வேலுமணி ஆகிய இருவருமே கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: மக்களே கவனம்! இன்று இரவு 14 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம்
இபிஎஸ் மீது அதிருப்தியில் சீனியர்கள்:
மேலும், இதே நிகழ்வின் போது இத்தனை நாட்களாக இபிஎஸின் ரைட் ஹேண்ட் போலும், அதிமுகவின் விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களை முதல் ஆளாக சந்திக்கும் ஜெயக்குமார் கலந்து கொள்ளாததும் பேசுபொருளாகி உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் ஜெயக்குமாருக்கு விருப்பமில்லை எனவும், அதற்கு அவர் போட்டியிடும் தொகுதியான ராயபுரம் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதி எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தது மட்டுமில்லாமல் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஜெயக்குமார் மற்றும் ஆர்பி உதயகுமார் உள்ளிட்ட சீனியர்களை ஓரம் கட்டிவிட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் எழுந்துள்ளது, அதிமுக கட்சியினுள் புயலைக் கிளப்பியுள்ளது என பேச்சுகள் பேசப்பட்டு வருகின்றன.

