'மொத்தம் 80 இடங்கள்.. 10 பேர் தான் தமிழ்நாடு.. தாரைவார்க்கப்படும் பணியிடங்கள்' - ராமதாஸ் அறிக்கை
மத்திய அரசு பணியிடங்களில் மாநில ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி மற்றும் ஆந்திரம், கர்நாடகத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு தொடர்வண்டித்துறை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் செயல்பாட்டு எல்லையில் பெரும்பகுதி தமிழ்நாட்டில் தான் உள்ளது. தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களில் 75 சதவீத இடங்களை நேரடியாகவும், 25 சதவீத இடங்களை ஏற்கனவே பணியில் உள்ள ஊழியர்களைக் கொண்டும் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே பணியில் உள்ள சி பிரிவு ஊழியர்களுக்கு 80 இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்பணிக்கு போட்டித் தேர்வு, தட்டச்சுக்கான தொழில்நுட்பத் தேர்வு ஆகியவை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 80 பணியிடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதல் 50 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மொத்த பணியிடங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் 12% இடங்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 88% இடங்களை பிற மாநிலத்தவர்கள் பறித்துக் கொண்டுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டுக்கான ரயில்வே பணியிடங்கள் வெளி மாநிலத்தவர்களுக்கு தாரை வார்க்கப்படுவது இயற்கை நீதிக்கு எதிரானது.
தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டித்துறை பணிகள் தமிழர்களைத் தவிர வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இதே போல் நடந்துள்ளது. ரயில்வேத்துறை பணிகள் மட்டும் என்றில்லை, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பிற துறை பணிகளாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை வெளிமாநிலத்தவர்களுக்குத் தான் கிடைக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்திறன் சார்ந்த தேர்வுகளில் கூட தமிழ்நாட்டின் மாணவர்களை விட ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்றால் அதை மர்மம் என்று தான் கூற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளில் பெரும்பாலானவை பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து கைப்பற்றப்படுவதை அனுமதிக்க முடியாது. இதை தமிழக அரசும், மக்களும் வேடிக்கைப் பார்க்கக்கூடாது. இத்தகைய சமூக அநீதியை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசுப் பணிகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவது தான் அதற்கு சரியான தீர்வாகும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள கடைநிலைப் பணிகள் முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 சதவீத இடங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் மத்திய அரசின் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.