Rahul Gandhi : நேரு குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரா? முழு பின்னணி இதோ..
தலைவர் பதவியில் மீண்டும் ராகுல் காந்தியை அமர வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
காங்கிரஸின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணி கடந்த வாரம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. தலைவர் பதவியில் மீண்டும் ராகுல் காந்தியை அமர வைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கடந்த 2019 மக்களவை தேர்தலை தொடர்ந்து, தோல்விக்கு பொறுப்பு ஏற்று தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதை அடுத்து, அந்த பதவியில் அவரை மீண்டும் அமர வைக்க கட்சியின் உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
சோனியா காந்தியும் தனது உடல்நிலை காரணமாக தலைவர் பதவிக்கு திரும்ப முடியாது என்று கூறிவிட்டார். நேரு குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தலைவர் பதவியை அளிக்க கட்சி உறுப்பினர்கள் இன்னமும் விரும்புவதால், தற்போது அவர்களின் கவனம் பிரியங்கா காந்தியிடம் திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் பொறுப்பாளராக இருந்த உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இது, அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
71 வயதான ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உள்பட சிலரின் பெயர்கள் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 1998க்குப் பிறகு முதல் முறையாக நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் கட்சித் தலைவராக வர வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதில், கட்சி தலைவர்கள் மத்தியில் ஒற்றை கருத்து நிலவவில்லை. புதிய தலைவருக்கான தேர்தல் பணி நேற்று தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், தற்போது அதில் தெளிவற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இக்குழப்பம் குறித்து கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பக்தா சரண் தாஸ் தனியார் தொலைக்காட்சியான என்டிடிவியில் பேசுகையில், "ஆம், அவர் (ராகுல் காந்தி) தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார். ஆனால், நாங்கள் அவரை தலைவர் பதவியை மீண்டும் பொறுப்பேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பதவி எப்படி நிரப்பப்படும் என்பதை இப்போது அவர்தான் சொல்ல வேண்டும்" என்றார்.
இருப்பினும், பாஜக அரசுக்கு எதிரான பிரச்சாரத்தை ராகுல் காந்தி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். செப்டம்பரில் ஒரு மாபெரும் பேரணியில் உரையாற்ற உள்ள அவர், கன்னியாகுமரியில் இருந்து "பாரத் ஜோடோ யாத்திரை" தொடங்குகிறார். இதுகுறித்து ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கூறுகையில், "ஆம், நாங்கள் ஒரு பேரணியை ஏற்பாடு செய்கிறோம். அதற்கு, ராகுல் காந்தி தலைமை தாங்குவார். தலைவர் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை," என்றார்.
கடந்த சில ஆண்டுகளாகவே, யார் தலைமை தாங்க வேண்டும் என்ற விவகாரம் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடியை அளித்து வருகிறது. குறிப்பாக, தொடர் தோல்விகளும் கட்சியின் முக்கிய தலைவர் காங்கிரிஸிலிருந்து வெளியேறி இருப்பதும் கட்சியின் பிரச்னயை மேலும் மோசமாக்கியது.
மார்ச் மாதம், கட்சியின் சட்டமன்றத் தேர்தல் தோல்விகள் குறித்து விவாதிக்க மூத்த தலைவர்களிடம் பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முன்வந்தார். இருப்பினும், தேர்தல் தொடர வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.