தீராத பஞ்சாப் பஞ்சாயத்து: கழுவிய மீனில் நழுவிய மீனாக காங்கிரஸ் தலைமை: கடுப்பில் சீனியர்கள்!
’பிரச்சினையை உங்களுக்குள்ளேயே பேசி முடித்துக்கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் இங்கே டெல்லிக்கு வராதீர்கள்’ என வெளிப்படையாகவே சொல்லி அனுப்பியுள்ளது காங்கிரஸ் தலைமை
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமாவுக்குப் பிறகும் பஞ்சாயத்து ஓயாததாக இருக்கிறது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை ராஜினாமா செய்து கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது தலைமை மேலும் ’பிரச்னையை உங்களுக்குள்ளேயே பேசி முடித்துக்கொள்ளுங்கள். மீண்டும் மீண்டும் இங்கே டெல்லிக்கு வராதீர்கள்’ என வெளிப்படையாகவே சொல்லி அனுப்பியுள்ளது.இதற்கிடையேதான் அம்ரிந்தர் சிங் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவைச் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
हक़-सच की लड़ाई आखिरी दम तक लड़ता रहूंगा … pic.twitter.com/LWnBF8JQxu
— Navjot Singh Sidhu (@sherryontopp) September 29, 2021
என்னதான் பஞ்சாயத்து?
பஞ்சாப் காங்கிரஸில் முன்னாள் முதல்வர் அம்ரிந்தர் சிங் தரப்புக்கும் அந்த மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தரப்புக்கும் இடையே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கான போட்டி தொடர்ந்து இருந்து வந்தது. அந்த மாநில காங்கிரஸ் கட்சியினர் அம்ரிந்தர் சிங் மீது அதிருப்தியில் இருந்த நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அவரை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொன்னது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சரண்ஜித் சிங் சன்னி புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே அம்ரிந்தரின் அடுத்த நகர்வு என்ன என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்தான் சித்து தான் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
— Navjot Singh Sidhu (@sherryontopp) September 28, 2021
புதிய முதலமைச்சர் சன்னியுடனான முரண்பாடுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வற்புறுத்தி வந்தார்கள். தனது முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என சித்து கூறிவந்த நிலையில் கட்சி மேலிடமே அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பஞ்சாயத்தை பஞ்சாபிலேயே முடித்துக்கொள்ளும்படியும் கூறி அனுப்பியுள்ளது. முதலமைச்சர் சன்னியும் ‘பேசித் தீர்க்க முடியாத பிரச்னை என எதுவும் இல்லை. சித்துவுடன் பேசுவதற்கு நான் தயார்’ என ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸில் இந்தப் பிரச்னை பற்றி எரிவது குறித்துப்பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபில், ‘டெல்லி காங்கிரஸில் தலைவர் என யாருமே இல்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் கட்சிக்கான முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை’ என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் கூடாரத்தில் என்னதான் நடக்கிறது என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் அரசியல் ஆர்வலர்கள்.