என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி விரிசல்..?.....கூட்டணி தர்மத்தை மீறினால் ஏற்கமாட்டோம் - அரசு கொறடா
அரசு மீது பா.ஜ.க. மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பொதுவெளியில் விமர்சனம் செய்வது கூட்டணி தர்மத்தை மீறுவதாகும்.
புதுச்சேரி கூட்டணி அரசு மீது பா.ஜ.க.வினர் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து முதலமைச்சர் ரங்கசாமியிடம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி தெரிவித்தனர். முதல்வரை விமர்சித்து போராட்டம் நடத்திய பாஜக ஆதரவு சுயேட்சை, அவருக்கு பாஜக எம்எல்ஏ ஆதரவு அளித்தது தொடர்பாக பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்களிடம் பேச என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முடிவு எடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆலோசித்தபிறகு கண்டனத்தை பதிவு செய்யுமாறு அறிவுறுத்திய எம்எல்ஏக்களை முதல்வர் ரங்கசாமி சமாதானம் செய்தார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதில், அதிருப்தியடைந்த பாஜக எம்எல்ஏக்கள், ஆளும் கூட்டணியில் இருந்தும், அனைத்து விதத்திலும் புறக்கணிக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமியை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏவான அங்காளனும், முதல்வர் ரங்கசாமி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி, முதல்வரை பதவியிலிருந்து நீக்கக்கோரி, சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினார். அதற்கு பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில், அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில், புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை துணைத்தலைவர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் திருமுருகன், லட்சுமிகாந்தன், பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். உடல்நிலை சரியில்லாததால் அமைச்சர் தேனீ சி.ஜெயக்குமாரும், காரைக்காலில் உள்ள அமைச்சர் சந்திர பிரியாங்காவும் கலந்து கொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையிலுள்ள அவரது அறையில் எம்எல்ஏக்கள் சந்தித்துப் பேசினர். கூட்டணியில் உள்ள பாஜக, பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள், தொடர்ந்து கூட்டணி தர்மத்தை மீறி முதல்வரை விமர்சிப்பது சரியானதில்லை. கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்றனர். அதற்கு, எதுவும் தேவையில்லை என சமாதானப்படுத்தி முதல்வர் ரங்கசாமி அனுப்பினார்.
என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடர்பாக அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் கூறியதாவது :-
அரசு மீது பா.ஜ.க. மற்றும் ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பொதுவெளியில் விமர்சனம் செய்வது கூட்டணி தர்மத்தை மீறுவதாகும். இப்போது சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். இதற்கு அனுமதி கொடுத்தது யார்? சபாநாயகரிடம் அனுமதி பெற்றார்களா? எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்களும் சட்டசபை வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். சபாநாயகரே பழச்சாறு கொடுத்து முடித்து வைத்துள்ளார். இப்போது சபாநாயகர் ஊரில் இல்லை. அவர் வந்ததும் நாங்கள் நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்போம். இப்போது முதலமைச்சர் ரங்கசாமியை விமர்சிப்பவர்கள் அவரது பெயரை சொல்லித்தான் வெற்றிபெற்றார்கள். அவர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா? எங்களால் ஓரளவுக்குத்தான் பொறுக்க முடியும். தன்மானத்தை ஒருபோதும் விட்டுதரமாட்டோம். கூட்டணி தர்மத்தை மீறினால் ஏற்கமாட்டோம் என்றார்.
“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை
பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்