“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை
"இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். 2024 பாராளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்ட சபை தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல. ஐந்தாண்டுகள் ஆட்சியை நல்லபடியாக முடித்து விட்டு செல்லுங்கள்."
ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, சிவானந்தா காலணி பகுதியில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அண்ணாமலை, “பாஜக கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல் துறை ஏவல் துறையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருப்பவர்கள், தமிழகம் கலவர பூமியாக மாற வேண்டும் என நினைப்பவர்கள் பாஜகவினர் வீடு, உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர்.
முதலமைச்சர் பாஜகவை மதவாத கட்சி என்கிறார். ஆனால் கலவரம் செய்தவர்கள் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. 2 ஜி ஊழல்வாதி பேசியது புதியதல்ல. இதற்கு முன்பும் பேசியுள்ளார். திமுகவிற்கும் இது புதிதல்ல. ஆனால் காலம் மாறிவிட்டது. அரசியல் களம் மாறியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. இப்பிரச்சினையை சமாளிக்க மக்களை மறக்கடிக்க அடுத்த பிரச்சினை துவக்க அறிவாயலத்தில் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். மத்தளம் போல ஒருபக்கம் பயங்காரவாதிகள். மறுபக்கம் ஆ.ராசா, காவல்துறை கண்டித்து பாஜகவினர் நின்று கொண்டிருக்கிறோம். பாஜக பொறுமை எந்தளவு இருக்கும்?” எனத் தெரிவித்தார்.
பெரியார் இறுதிப் பேரூரை என்ற புத்தகத்தில் திமுகவினரை பெரியார் விமர்சித்து பேசியதாக ஒரு கருத்தைக் கூறிய அண்ணாமலை, ”இது நான் சொல்லவில்லை. இது பெரியார் சொன்னது. இதற்கும் ராசா பேச வேண்டும். இது தான் திராவிட மாடல்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”பிஎப்ஐ, எஸ்டிபிஐ நிர்வாகிகள் 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மலப்புரத்தில் சிஆர்பிஎப் கைது செய்தது போல தமிழகத்திலும் நடக்கும். மத்திய அரசிற்கு பவர் இல்லை என நினைக்க வேண்டாம். முதலமைச்சர் சிஆர்பிசி படித்தாரா இல்லையான்னு தெரியாது சிஆர்பிசியில் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றேன் 11 ஆண்டுகள் 5 ஆயிரம் நாட்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் போட்டு உள்ளேன். அக்குவேர் அணியாக சட்டம் தெரியும்.
முதலமைச்சர் கடவுள் கிடையாது. கோபாலபுரம் குடும்பத்திற்கு நான்கைந்து அமைச்சர்கள் பாத்திரம் கழுவி கிச்சன் கேபினேட்டில் இருக்கிறார்கள். நாங்கள் தான் சுயமரியாதைக்காரர்கள். முதல்வர் தவறுக்கு விமோசனம் கொடுக்குமாறு கோயில் கோயிலாக நாங்கள் செல்லவில்லை. எங்களுக்கு சொந்தமான சுயமரியாதை, சமூக நீதியை திமுக ஒட்டி வெட்டியிருப்பது அபத்தத்தின் உச்சம். முதலமைச்சரின் அறிக்கை கண்ணாடி முன்பாக அமர்ந்து அவருக்காக எழுதியது போல் உள்ளது. அவர் சொன்னது போல நாங்கள் 15 மாதங்களாக நகர்ந்து செல்கிறோம். அப்படியே இருக்க மாட்டோம்.
ஆட்சிக்கு வர வேண்டும் என கனவு காண்கிறோம். மது அடிமையில் இருந்து மீட்க, அரசு அலுவலகங்களில் வசூல் செய்வதை நிறுத்த, கனிம வளக் கொள்ளையை தடுக்க ஆட்சிக்கு வர கனவு காண்கிறோம்.
கோவை மாநகராட்சி பட்ஜெட் 3327 கோடி ரூபாய். சொத்து வரி உயர்வு மூலம் 350 கோடி ரூபாய் வருமானம் கூடுதலாக கிடைக்கிறது. ஆனால் என்ன செய்கிறார்கள்? குப்பை, தெருநாய், குண்டும் குழியுமான சாலைகளாக உள்ளது. பெண் மேயர்கள் என்ன அமைச்சர்கள் வீட்டு வேலைக்காரிகளா? பெண்களை அடிமையாக வீட்டில் நடத்துவது போல, வெளியேயும் நடத்துகிறார்கள்.
அமைச்சர் பொன்முடி பெண்களை ஓசியில் செல்வதாக கூறுகிறார். ஆனால் திமுகவினர் ஓசிக்கு பிறந்தவர்கள். ஓசியில் ஆட்சி நடத்துபவர்கள். ஓசிக்கு மாரடிப்பவர்கள். பணம் கேட்டு மிரட்டிய திமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு போட்டாலும் கைது இல்லை. 15 மாதங்களாக திமுக ஆட்சியை சகித்துக் கொண்டிருக்கிறோம்
ஸ்டாலின், பினராயி விஜயன் இரண்டு பேரும் கேடிகள். இருவருக்கும் என்ன இரகசிய உறவு? பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்ததற்கு ஊழலே காரணம். கோவையில் உள்ள பொறுப்பு அமைச்சர் முதுகெலும்பு இல்லாமல் குனிந்தபடி இருக்கிறார். கோவை மாநகர சொத்தை சுரண்டி சுரண்டி கோபாலபுர குடும்பத்தை வளர்க்க நினைக்கிறார். ராமரை கொச்சைப்படுத்தி அரசியல் செய்ததால் உலகம் முழுவதும் ஆயிரம் கம்பன் கழகங்கள் உருவாக திமுக காரணமாக இருந்தது. அதேபோல சனதன தர்மத்தை மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சேர்ப்பார்கள். எங்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பார்கள்.
இரண்டு வருடம் கழித்து எங்கள் மீது கைவைத்த கோவை காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை வந்தால் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் பணி ஓய்வு பெறும்போது பென்சன் பணம் கிடைக்கவில்லை என்றால் நாங்கள் பொறுப்பல்ல. 99 சதவீத காவலர்கள் நேர்மையானவர்கள். ஆளும் அரசுக்கு அடிமையாக இருக்க மாட்டோம் எனக்கூறும் காவல் துறையினரும் இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். 2024 பாராளுமன்ற தேர்தலோடு, தமிழக சட்ட சபை தேர்தல் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் மாற்றிக் கொள்ளவில்லை எனில், மாற்றப்படுவீர்கள். பாஜக தொண்டர்கள் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவார்கள். முதலமைச்சர் நடுநிலையாக நடந்து கொள்ளும் வரை, கண்ணியமாக பாஜக தொண்டர்கள் இருப்பார்கள். ஐந்தாண்டுகள் ஆட்சியை நல்லபடியாக முடித்து விட்டு செல்லுங்கள். நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பது உங்கள் கையில் தான் உள்ளது” எனத் தெரிவித்தார்.