(Source: ECI/ABP News/ABP Majha)
சேலத்தில் ஆ.ராசாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்..
முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஆ.ராசாவிற்கு எதிராக சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் பரப்புரையின்போது அவதூறாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது.
அவரது பேச்சுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கூட்டணி கட்சியான பா.ஜ.க. தலைவர்கள் உட்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆ.ராசாவும், தான் மு.க.ஸ்டாலினையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் அரசியல் குழந்தைகளாக உருவகப்படுத்தித்தான் பேசினேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டம்
ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனங்கள் அதிகரித்தைத் தொடர்ந்து, தி.மு.க.வினர் தேர்தல் பரப்புரையில் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து சேலம் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆ.ராசாவின் உருவபொம்மையுனுடம், கருப்புக் கொடியுடனும் 2000-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் ஆ.ராசாவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் ஐ.லியோனி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.