Popular Front of India: தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலம்.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது குற்றஞ்சாட்டிய ஆளுநர்!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாகச் செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு ஆளுநர் பேசியதாவது:
''ராணுவ வீரர்கள் தினமும் நாட்டிற்காகப் போரிட்டு வருகின்றனர். தீவிரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவம் எப்போதுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனினும் ராணுவம் குறித்த பெரிய அளவில் புத்தகம் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தீவிரவாதத்திற்கு எதிராக எப்படி போரிடுவது, உண்மையில் என்ன என்ன பிரச்சினைகள் உள்ளது என்பது குறித்து விரிவாக விளக்கும் வகையில் இந்த புத்தகம் உள்ளது. -
இந்த புத்தகத்தை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி. தீவிரவாதம் குறித்து விரிவாக இந்த புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். இவர்கள் மறுவாழ்வு மீட்பு மையம் போலவும், மாணவர்கள் அமைப்பைப் போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்துகொண்டு நம் நாட்டில் இயங்கி வருகின்றனர். மேலும் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டு வருகின்றது. ஒட்டுமொத்தத்தில் நாட்டைச் சீர்குலைக்கவே இந்த அமைப்பு இயங்கி வருகின்றது.
அரசியல் லாபத்திற்காக வன்முறையை தூண்டுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகள்தான். அவ்வாறு செய்வதை ஏற்றுகொள்ள முடியாது.
முந்தைய காலங்களில் நம்முடைய நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பின் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டது.
தீவிரவாதத்திற்கு எதிராக எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாகத் தற்போது நாட்டில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது.எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு காஷ்மீருக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்''.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்