Anbumani Vs Ramadoss: நானே வரேன்..! ஐயாவிற்கு டோஸ், அன்பு மகனுக்கு பாசக்கரம் - களத்தில் சரஸ்வதி ராமதாஸ்
Anbumani Vs Ramadoss: கட்சி பிரச்னைக்குள் குடும்பத்தை இழுக்காதீர்கள் என ராமதாஸிற்கு அவரது மனைவி, சரஸ்வதி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Anbumani Vs Ramadoss: ராமதாஸின் மனைவி சரஸ்வதி மகன் அன்புமணியை நேரில் சந்தித்து அரசியல் விவகாரங்கள் பேசியதாக கூறப்படுகிறது.
முட்டல் மோதல்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதனால், ஒவ்வொரு கட்சியும் தங்களது கூட்டணியை வலுப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன. வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமக யார் பக்கம் செல்லவிருக்கிறது என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேநேரம், அக்கட்சியில் யாருக்கு அதிகாரம் என்பது நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணி இடையே மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராமதாஸ்:
ஒவ்வொரு வார வியாழனன்றும் செய்தியாளர்களை சந்தித்து வரும் ராமதாஸ், “அன்புமணிக்கு ஆளுமை இல்லை, அவருக்கு தலைவர் பதவி கொடுத்து தவறு செய்துவிட்டேன். எனது மனைவியை பெற்ற தாயென்றும் பாராமல் பாட்டிலால் தாக்கினார், எனது பேச்சை கேட்காமல் பாஜக உடன் கூட்டணி அமைத்தார், சௌமியா அன்புமணியை வேட்பாளராக களமிறக்கினார், எனது சமூக வலைதள கணக்குகள் அன்புமணி ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன, எனது வீட்டில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டுக்கேட்பு கருவி இருந்தது” என அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். ஆனால், தந்தை மீது காட்டமான கருத்துகள் எதையும் அன்புமணி முன்வைக்கவில்லை.
கட்சியை கைப்பற்றுவதில் தீவிரம்:
தந்தையின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காவிட்டாலும், அவரால் நிறுவப்பட்ட கட்சியை கைப்பற்றுவதில் அன்புமணி தீவிரம் காட்டி வருகிறார். கட்சி நிர்வாகிகளை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார். தனக்கு எதிராகவும், ராமதாஸிற்கு ஆதரவாகவும் செயல்படும் நபர்களை கட்சியில் இருந்து நீக்குவது, தனக்கு ஆதராவனவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவது போன்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். டெல்லி வரை சென்று தேர்தல் ஆணையத்தில் பல தரவுகளையும் வழங்கி, இன்னும் தானே கட்சியின் தலைவராக நீடிப்பதாகவும் தெரிவித்து வந்துள்ளார். அதுபோக, அண்மையில் தான் தனது தந்தை தையிலாபுரம் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று, தனது தாய் சரஸ்வதியை சந்தித்துவிட்டு வந்தார்.
VIDEO | Chennai: PMK leader Anbumani Ramadoss' mother visits his house in Akkarai amidst father-son conflict
— Press Trust of India (@PTI_News) July 14, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/mK3YgcdRQ4
மகனை சந்திக்க வந்த தாய்:
இந்நிலையில் தான், ராமதாஸின் மனைவி சரஸ்வதி சென்னையில் உள்ள தனது மகன் அன்புமணியின் வீட்டிற்கு சென்றுள்ளார். காரில் வந்து இறங்கிய தாயை, வாசலுக்கே வந்து கட்டியணைத்து அன்புமணி வரவேற்றார். தொடர்ந்து வீட்டிற்குள் சென்று தனது மருமகள், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆசி வழங்கினார். அங்கேயே குடும்பத்தினருடன் உணவும் அருந்தியுள்ளார். அதனை தொடர்ந்து தனது மகனுடன் தனிமையில் அரசியல் ரீதியாகவும் சரஸ்வதி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐயாவுக்கு டோஸ்..மகனுக்கு பாசம்..
சரஸ்வதி மற்றும் அன்புமணி இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இல்லாவிட்டாலும், கட்சி தரப்பில் வெளியான தகவல்கள் தான் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. அதன்படி, “தனது மூன்று பிள்ளைகளில் அன்புமணி தான் சரஸ்வதிக்கு மிகவும் செல்லப்பிள்ளையாம். குடும்பத்தில் சில பிரச்னைகள் வருவது சகஜம் தான். ஆனால், பாட்டிலால் தனது தாயையே அன்புமணி தாக்கினார் என கணவன் பொதுவெளியில் சொன்னதை கேட்டது, கட்சி விவகாரத்திற்காக குடும்ப பிரச்னையை இழுக்க வேண்டும் என கராராக பேசினாராம். இதே கருத்தை தான் அன்புமணியையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியதோடு, தனது மகள்களை கட்சி விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளாராம்” என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கமாக கட்சி விவகாரங்களில் பெரிதாக தலையிடாத சரஸ்வதி, தந்தை மற்றும் மகனிடையே ஏற்பட்டுள்ள மோதலை சரிசெய்ய தானே முதல்முறையாக களத்தில் இறங்கியுள்ளது, பாமகவில் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், விரைவில் கட்சி இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.





















