PMK: "கட்சியை விட்டு போ": வார்த்தையை விட்ட ராமதாஸ்: மைக்கை கீழே போட்ட அன்புமணி..உடையும் பாமக?
Ramadoss - Anbumani : ராமதாஸ் பேசியதையடுத்து, ”சென்னை பனையூரில் புதிதாக அலுவலகம் ஆரம்பித்திருக்கிறேன்; அங்கு வந்து என்னை பார்க்கலாம் என அன்புமணி தெரிவித்தது , பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும் , அவரது மகன் அண்புமணி ராதாசுக்கும் இடையே கருத்து மோதலானது வெளிப்படையாக வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பாமக கூட்டம்:
இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 ஆண்டிற்க்கு விடை கொடுப்போம் 2025 ஆண்டை வரவேற்போம்" புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டமானது பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் தொடங்கியது.
அப்போது பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச ஆரம்பித்தார், பரசுரமான் முகந்தனை, பாமக கட்சியின் மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார். அவர் மாநில சங்க தலைவராக பொறுப்பேற்று, அன்புமணிக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதை சற்றும் எதிர்பாராத அன்புமணி ராமதாஸ், இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்; உடனே மேசையின் மீது இருந்த மைக்கை எடுத்து, 4 மாதத்திற்கு முன்பு வந்தவருக்கு பதவியா.!, என்ன அனுபவம் உள்ளது; அனுபவம் உள்ளவர்களுக்கு கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம் என அன்புமணி தெரிவித்தார்.
”விலகி கொள்ளலாம்”
உடனே குறுக்கிட்ட ராமதாஸ், நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்; இல்லையென்றால் கட்சியில் இருக்க முடியாது ; நான் ஆரம்பித்த கட்சி , நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் தெரிவித்தார்.
நான் மீண்டும் சொல்கிறேன்; பரசுராமன் முகந்தனை, பாமக கட்சியின் மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்படுகிறார் என தெரிவித்தார்.
”புதிய அலுவலகம் ஆரம்பித்திருக்கிறேன்”
உடனே, மைக்கை கையில் இருந்து மேடையின் மீது அன்புமணி தூக்கி போட்டார். இதையடுத்து, பேச ஆரம்பித்த ஜி.கே மணியிடம் மைக்கை வாங்கி பேசிய அன்புமணி” சென்னை பனையூரில் அலுவலகம் வைத்திருக்கிறேன், புதிதாக ஆரம்பித்திருக்கிறேன். அங்கு வந்து என்னை பார்க்கலாம் என அன்புமணி தெரிவித்தார்.
இதையடுத்து மீண்டும் பேசிய ராமதாஸ், “ முகந்தன் தலைவர் , விருப்பம் இல்லாதவர்கள் , எனது பேச்சை கேட்காதவர்கள் விலகிக் கொள்ளுங்கள்; யாராக இருந்தாலும் என ராமதாஸ் தெரிவித்தார்.
கூட்டணி பிரச்னை:
இந்நிலையில், பாமக கட்சியின் அடுத்த எதிர்காலம் அன்புமணிதான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தந்தை ராமதாசுக்கும் மகன் அன்புமணிக்கும் மேடையிலே வார்த்தை மோதலில் ஈடுபட்ட காட்சியானது, பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலகி கொள்ளலாம் என ராமதாஸ் தெரிவித்ததும்; பனையூரில் புதிய அலுவலகம் என அன்புமணி தெரிவித்த நிகழ்வுகளானது, அன்புமணி பாமகவை விட்டு விலகுகிறாரா என்ற கேள்விக்கு இடம் அளித்திருக்கிறது.
ஏற்கனவே , கூட்டணி தொடர்பாக இருவருக்கும் இடையே முரண்பாடு தொடர்ந்து நிலவியதாக தகவல் தெரிவிக்கின்றன. அன்புமணி , பாஜக கூட்டணியில் தொடரலாம் என்றும்; ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் விருப்பம் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வெளிப்படையாக பொதுவெளியில் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் வந்திருப்பது பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.