"மாண்புமிகு தளபதி" தலைமையை ஏற்கும் ஜி.கே.மணி.. பாமகவிற்கு Bye Bye.. ஸ்கெட்ச் போடும் திமுக..!
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் இல்லையே என பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, சட்டமன்றத்தில் பேசியது பாமகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றாக பாமக இருந்து வருகிறது. இந்தநிலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனைக்கு பின்னணியில், கூட்டணிக் கணக்குகள் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க மற்றும் பாஜக கூட்டணிகள் இடம்பெற வாய்ப்புள்ள பாமகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில் ஜி.கே.மணி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
அன்புமணிக்கு எதிராக ஜி.கே.மணி போடும் திட்டம்
ராமதாஸ் தன்னிடமிருந்த தலைவர் பதவியை, தனது மகன் அன்புமணிக்கு கொடுத்ததிலிருந்து, ஜி.கே.மணிக்கு அன்புமணி மீது கோபம் இருந்து வந்துள்ளது. அவரது மகனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டு, அதன் பிறகு அந்த பதவி பறிக்கப்பட்டது.
இதன் பிறகு ஜி.கே.மணிக்கு அன்புமணி மீது கோபம் அதிகரித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து ராமதாஸின், உடல் மற்றும் மனநிலையை பயன்படுத்திக் கொண்டு தந்தை, மகனுக்கு இடையே இருந்த சிறு பிரச்சனைகளை பெரிதாக்கி கொண்டு வந்துள்ளார் என்ற தகவலையும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தந்தை மற்றும் மகனுக்கு இடையே பிரச்சனையை சரி செய்ய விடாமல் ஜி.கே. மணி பார்த்து வந்துள்ளதாகவும் பாமகவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் பாமக நிர்வாகிகள் கூறுகையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உருவாக்கிய பிறகு, அந்தக் கூட்டணியில் பாமக செல்வது என்பது தி.மு.க தரப்புக்கு பிடிக்கவில்லை, ஜி.கே. மணி ஏற்கனவே திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அந்த தொடர்புகளை வைத்து, ஜி.கே.மணி மூலம் அதிமுக கூட்டணி உருவாகாமல் தடுக்கவே கட்சியில் இந்த பிரச்சனையை சரி செய்யவிடாமல் ஜி.கே.மணி பார்த்துக் கொண்டதாக பாமகவினர் புலம்பிய தகவலை, இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.பி.பி நாடு செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
கலைஞரைப் புகழ்ந்து தள்ளிய ஜி.கே. மணி
மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் அதற்கு ஆதரவு இருப்பதாக ஜி.கே.மணி பேசி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் கருணாநிதிக்கு முத்தமிழ் அறிஞர் எனும் பட்டத்தை அளித்தவன் நான் தான் என்றும் ஜி.கே. மணி பெருமிதம்.
இது குறித்து மேலும் அவர் கூறியவை: நீங்கள் இயல், இசை, நாடகம் மூன்றிலும் வல்லவர் அதனால் முத்தமிழ் அறிஞர் என அழைக்க வேண்டும் என கலைஞரிடம் நான்தான் சொன்னேன். கலைஞர் கூட தயங்கினார், நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என இந்த சாமானியன் தான் சொன்னேன். அதன் பிறகு கலைஞர் ஏற்றுக்கொண்டார் அனைவரும் இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் என அழைக்கிறார்கள். தனது பேச்சை முடிக்கும்போது மாண்புமிகு தளபதி என ஜி.கே.மணி பேசியது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இணையும் ஜி.கே. மணி ?
இந்தநிலையில் இந்த விவகாரம் தற்போது, வெளியாகிய நிலையில் ஜி.கே.மணி விரைவில், பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காகவே முதலமைச்சரை குஷி படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை செல்வப்பெருந்தகை கொண்டு வந்ததாகவும் தெரிகிறது. ஒருவேளை அதிமுக மற்றும் பாமக கூட்டணி அமைந்துவிட்டால், பாமகவிற்கு எதிராக ஜி.கே.மணி மற்றும் வேல்முருகனை பயன்படுத்தலாம் என திமுக தரப்பில் திட்டம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

