PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
டெல்லி சென்ற அன்புமணியை அதிரவைக்கும் விதமாக உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்றை பாஜக மூத்த தலைவர்கள் காட்டியதாகவும், அதன் காரணமாகவே அமித்ஷா அவரை சந்திக்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அரசியல் களம் அனல்பறக்கத் தொடங்கியிருக்கிறது. முதலமைச்சர் நாற்காலியைப் பிடிக்க திமுக-வும், அதிமுக-வும் மல்லுகட்டி வரும் நிலையில், மறுமுனையில் விஜய், சீமானும் களத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமக-வின் சண்டை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
ராமதாஸ் - அன்புமணி சண்டை:
ராமதாஸ் - அன்புமணியின் சண்டை காரணமாக பாமக-வின் உண்மை விசுவாசிகள் கவலை அடைந்துள்ளனர். கூட்டணி யாருடன் என்பது பிரதான சிக்கலுக்கு காரணம் என்றாலும், குடும்பத்தினர் தலையீடு மற்றொரு முக்கிய காரணமாக உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக இருந்தாலும், அன்புமணியின் செயல்பாடுகளால் ராமதாஸ் மிக கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அமித்ஷா சந்திக்க மறுத்தது ஏன்?
கட்சி விதிகள், கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதாக கட்சி விதிகள் கூறினாலும், பாமக-வின் பலமாக கருதப்படும் வன்னிய சமுதாயத்தின் ஆதரவு ராமதாஸிற்கு ஆதரவாகவே வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அன்புமணி அமித்ஷாவைச் சந்திக்க முயற்சித்துள்ளார்.

பாஜக-வின் மூத்த தலைவர்கள் சிலர் மூலமாக அமித்ஷாவைச் சந்திக்க அன்புமணி முயற்சித்துள்ளார். ஆனால், அந்த மூத்த தலைவர்கள் அன்புமணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக அறிக்கை ஒன்றை காட்டியுள்ளனர். அதாவது, மத்திய அரசின் உளவுத்துறை தந்த ரிப்போர்ட்தான் அந்த அறிக்கை. அதில், கட்சியின் சட்டரீதயாக அன்புமணிக்கு சாதகமாக இருந்தாலும், வன்னிய சமுதாயத்தின் ஆதரவு பெரும்பாலும் ராமதாசிற்கே இருப்பதாக இருந்துள்ளது. இது அன்புமணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ராமதாசின் செல்வாக்கு:
இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அன்புமணி கைகாட்டும் வேட்பாளரை எதிர்த்து ராமதாஸ் குரல் கொடுத்தாலோ, பரப்புரை செய்தாலோ அன்புமணி மிகப்பெரிய சரிவைச் சந்திக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மேற்கோள் காட்டி அமித்ஷாவை சந்திக்க அன்புமணிக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், டெல்லி சென்ற காரணம் நிறைவேறாமலே அன்புமணி மீண்டும் சென்னை திரும்பிவிட்டார்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கி உள்ள பாமக, பிளவுபட்டு தேர்தலைச் சந்தித்தால் அவர்கள் எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்களோ, அந்த கூட்டணித் தலைமைக்கே அனைத்து சிக்கல்களும் போய் சேரும் அபாயமும் உள்ளது. தற்போது பாமக அதிமுக - பாஜக கூட்டணியில் இருப்பதால் அவர்களது மோதலை முடிவுக்கு கொண்டு வர கூட்டணி கட்சிகளும் முனைப்பில் உள்ளது. அதேசமயம், தந்தை - மகன் விவகாரத்தில் பெரியளவு தலையிடவும் தயக்கம் காட்டி வருகின்றனர்.





















