ஷேக் ஹசீனாவுக்கு தோள் கொடுத்து உதவிய இந்தியா.. டெல்லியில் பரபர மீட்டிங்.. ஓ விஷயம் அப்படி போகுதா!
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தியா வந்துள்ள ஷேக் ஹசீனா, பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல்.
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் முக்கிய கூட்டம் நடைபெற்றுள்ளது. பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் வங்கதேசத்தில் நிலவி வரும் சூழல் குறித்து பிரதமரிடம் விவரிக்கப்பட்டது.
டெல்லியில் நடந்த பரபர மீட்டிங்: தொடர் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். டாக்காவில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட ஷேக் ஹசீனா, ஹிந்தன் விமானப்படை தளத்திற்கு வந்திறங்கினார்.
அவரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். டெல்லியில் பாதுகாப்பான இடத்தில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் விரைவில் பிரிட்டல் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. இதில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய - வங்கதேச உறவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இதற்கிடையே, இடைக்கால அரசை ராணுவம் அமைக்க உள்ளதாக வங்கதேச ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் அறிவித்துள்ளார். அமைதியாக இருக்கும்படி போராட்டக்காரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வங்கதேச பிரதமராக 5 முறை பதவி வகித்த ஷேக் ஹசீனா, அரசியலுக்கு திரும்ப போவதில்லை என அவர் மகன் சஜீப் வாஜித் ஜாய் கூறியுள்ளார்.
அரசு வேலைவாய்ப்புகளில் உள்ள இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என தொடங்கிய போராட்டம், மிக மோசமான கலவரமாக மாறியது. நேற்று நடந்த போராட்டத்தில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மாதம், போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 1971ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிரான விடுதலை போரில் ஈடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுடன் சேர்த்து மற்ற இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தியாவுக்கு நெருக்கமாக கருதப்பட்ட ஷேக் ஹசீனா, பதவி விலகி இருப்பது இந்திய - வங்கதேச உறவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ஷேக் ஹசீனா, அமெரிக்காவுடன் பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. ஆனால், இந்தியாவுடனும் சீனாவுடனும் இணக்கமான உறவை பேணி வந்தார்.