“தனிமனித ஒழுக்கம் அவசியம்; அப்போதுதான் வழிகாட்ட முடியும்” - ஜி.கே.வாசன்
”அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றம் இருந்தாலும் அது முன்னேற்றத்திற்கான வழியாக இருக்க முடியாது”
நெல்லை கேடிசி நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகநாதராஜா திருமண நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் அவர் சார்ந்த கழகம் ஆட்சியில் இருக்கிறது. அதன் அடிப்படையில் அரசும் கழகமும் மத்திய அரசிடம் நாணயம் வெளியிட வேண்டும் என்று கேட்கின்றனர்.. இது புதிதல்ல. மத்திய அரசை பொறுத்தவரை அரசியலுக்கு இதில் இடம் கொடுக்கவில்லை, மாற்றான் தாய் மனப்பான்மை இல்லாமல் திமுக தலைவருக்கு திமுக ஆட்சியில் நாணயம் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டபோது உடனடியாக மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுத்து அதன் அடிப்படையில் தான் தமிழக அரசினுடைய முதல்வருடைய கோரிக்கையை ஏற்று ராணுவ துறை அமைச்சர் வந்து மரியாதை செய்து சென்றிருக்கிறார். இது அரசியலில் உச்சகட்ட மரியாதை, ஓர் கலாச்சாரம், ஓர் பண்பாடு, அரசியலுக்கு எந்தவிதமான முடிச்சும் போட வேண்டிய அவசியமில்லை என்பது என்னுடைய கருத்து.
அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றம் இருந்தாலும் அது முன்னேற்றத்திற்கான வழியாக இருக்க முடியாது. தமிழகத்தில் பாலியல் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. சிறுவர் முதல் வயதானவர்கள் வரை பாலியல் ரீதியான சம்பவத்தில் பாதிக்கப்படுவது மனதில் ரனத்தை ஏற்படுத்துகிறது. இதற்கெல்லாம் அடித்தளம் தனிமனித ஒழுக்கம். அது இருந்தால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு ஒழுக்கமானவர்களாக வாழ நம்மால் வழிகாட்ட முடியும். அதற்கு உண்டான பாடங்கள் பள்ளி, கல்லூரிகள், அரசு, தனியார் அலுவலகங்கள், திருமண வீடுகளில் இதனை ஒரு பாடமாக எல்லோருக்கும் எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உச்சகட்ட தண்டனை வழங்க வேண்டும். பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவர் கண்டறியபட்டால் விசாரணை ஏதும் இல்லாமல் உடனடி தூக்குத் தண்டனை வழங்க த.மா கா வலியுறுத்துகிறது. மிக முக்கியமாக இந்த பிரச்சினைக்கு குடிப்பழக்கம் டாஸ்மாக், போதைபழக்கம் தான் இந்த விவாகரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு விழித்துக்கொள்ள வேண்டும். டாஸ்மாக்கை படிப்படியாக மூட ஒரு நல்ல சூழலை அரசு ஏற்படுத்த வேண்டும்.போதை பொருள் நடமாட்டத்தை குறைக்கக்கூடிய கட்டாயத்தில் இந்த அரசு செயல்பட வேண்டும்.
ஜனநாயகத்தில் இன்று எந்த துறை சார்ந்தவர்களும் பொதுவாழ்வுக்கு வரலாம், மக்கள் பணியாற்றலாம். அதனடிப்படையில் தவெகவிற்கு தமாகா சார்பில் வாழ்த்துக்கள். மக்கள் பணி இயக்கப்பணி. இதன் அடிப்படையில் மக்களுக்கு யார் மீது நம்பிக்கை ஏற்படுகிறதோ அவர்களுக்கு தான் வாக்கு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. மக்கள் குரலே மகேசன் குரல். அதன் படி மக்கள் நிச்சயமாக அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் வருங்காலங்களில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். தமாகா கூட்டணி அதிலே முதன்மை கூட்டணியாக தமிழக மக்களுடைய நம்பிக்கையை பெறும் என்ற ரீதியில் பயணம் தொடர்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுடைய கொள்கையின் அடிப்படையில் பாடல்கள் இருக்கும். இப்படி பாடல்கள் வெளியிடுவது தேர்தல் நேரத்திலும் கொடியேற்றும் நேரத்திலும், இயக்க கூட்டங்களிலும், இல்ல விழாக்களிலும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போடுவது வழக்கம், பழக்கம். இதனையெல்லாம் தாண்டி நேரடி மக்கள் பணி மக்களுக்கு அந்த தலைவர் மீது கட்சி மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதனை தாண்டி கட்சியின் பிரதிநிதி சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ, உள்ளாட்சியோ, மாநகராட்சியிலோ போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். புதிய கட்சி தொடங்குவதே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். மக்களின் எண்ணம், இயக்க நடவடிக்கைகளையும் பொறுத்தே கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை உண்டாகும் வாக்குகள் அமையும் என தெரிவித்தார்.