திரௌபதி முர்மு ஆதரவு திரட்டல்.. ஓ.பி.எஸ், இபிஎஸ்-க்கு அழைப்பு.. ஒரே மேடையில் இபிஎஸ், ஓபிஎஸ்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு கேட்க இன்று சென்னை வருகிறார்.
தற்போது இந்திய குடியரசுத்தலைவராக இருந்துவரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் வருகிற ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பழங்குடித் தலைவரான திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, திரௌபதி முர்மு கடந்த ஜுன் 24 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரின் வேட்பு மனுவுக்கு ஆளும் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களிடம் தொலைபேசியில் அழைத்து ஆதரவு கோரினார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு கேட்க இன்று சென்னை வருகிறார். இன்று சென்னையிலும், நாளை புதுச்சேரியிலும் திரௌபதி முர்மு ஆதரவு திரட்ட இருக்கிறார்.
இன்று சென்னையில் நடைபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் நேரடியாக சந்திக்கவில்லை. இன்று நடைபெறும் சிறப்பு அழைப்பாளர்கள் கூட்டத்தில் திரௌபதி முர்முவை ஆதரிக்க இருவரும் வருவார்களா..? ஒரே மேடையில் அமருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, உள்ளாட்சித் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான படிவம் ஏ மற்றும் பி யில் கையெழுத்து இட தயாரா? என்று ஓ.பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தை எடப்பாடி பழனிசாமி நிராகரித்தார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து ஒதுக்கப்படுகிறார் என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட செயலாளர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை ஆதரவு இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியது.
இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியின் பெயரை நீக்கிவிட்டு, தலைமை நிலைய செயலாளர் என்று பதிவிட்டார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்திற்கு எழுதிய கடித்ததில்” கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல. நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காகத் தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்படையதாக இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். ஈபிஎஸ் எழுதிய இந்த கடிதம் அதிமுக தொண்டர்களிடையே மிக பெரிய அதிர்ச்சியை அளித்தது.
தொடந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் மறைத்து பன்னீர்செல்வத்தை அதிமுகவின் பொருளாளர் மட்டுமே என்றும், எடப்பாடி பழனிசாமி தன்னை கழக நிலையை செயலாளர் என்றும் அந்த கடித்ததில் குறிப்பிடப்பட்டது.
இப்படி அதிமுக கழகத்திற்குள் கலவரம் வெடிக்க, இன்று நடைபெறும் திரௌபதி முர்மு ஆதரவு கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் வழக்கம்போல் கூட்டாக ஆதரவு தெரிவிப்பார்களா அல்லது ஒருவரை ஒருவர் புறக்கணித்துவிட்டு ஒருவருக்கு ஒருவர் போட்டி நிலையிலேயே இருப்பார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
முன்னதாக, பாஜக தலைவர் அண்ணாமலை, சிடி ரவி ஆகியோர் அதிமுக சார்பில் ஓபிஎஸ், இபிஎஸ்- ஐ திரௌபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளர் பதவிக்கு வேட்புமனு செய்தபோது டெல்லிக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது ஓபிஎஸ் மட்டுமே கலந்து கொண்டார். இபிஎஸ் தனது ஆதரவாளர்களை மட்டுமே அனுப்பி வைத்தார்.
பாஜக குடியரசு தலைவர் ஆதரிக்க ஓபிஎஸ், இபிஎஸ் தன்மானம் முக்கியமென பங்கேற்காமல் தவறினால், கூட்டணி கட்சியில் அதிமுகவில் இவர்களது நிலைமை அடிசறுக்கல்தான் என பேசப்படுகிறது