OPS : 'தொண்டர்களே.. தயவுசெய்து...' பரபரப்புக்கு நடுவே ஓபிஎஸ் போட்ட 4 வரி ட்வீட்!
அதிமுக தொண்டர்கள் அனைவரும் தயவுசெய்து அமைதி காக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்:
வரும் ஜூன் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறவிருக்கும் நிலையில், இது குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு குறித்து விவாதிப்பதற்காக தான் கூட்டம் என்று அனைவரும் அழைக்கப்பட்டனர்
ஒற்றை தலைமை:
ஆனால், அதிமுக தலைமை அலுவலக வாசலில் ஒற்றைத் தலைமை குறித்து தொண்டர்கள் கோஷம் எழுப்ப அந்த இடம் பரபரப்பானது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின் போதும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும் என்று சிலரும், இபிஎஸ் தலைமையேற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் பேசியிருக்கின்றனர். ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்பதில் நிர்வாகிகள் உறுதியாக இருந்திருக்கின்றனர். இதனால் இருவரில் தலைவராகப் போவது யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக போஸ்டர்கள்:
இந்த நிலையில், ஓபிஎஸ் தான் ஒற்றைத் தலைமையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி அதிமுக தலைமை அலுவலகம் எதிரேயும், சென்னையில் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள்:
ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள் இன்று ஒட்டத்தொடங்கியுள்ள நிலையில், இபிஎஸ்க்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி போஸ்டர் ஒட்டுவதற்கு ஒருபுறம் போட்டி நடக்க, சென்னையில் ஒட்டப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அதிமுக தொண்டர்களுடன் ஓபிஎஸ் சந்திப்பு:
ஒற்றை தலைமை ஆலோசனைக்கு இடையே, வீட்டில் குவிந்துள்ள அதிமுக தொண்டர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் சந்தித்தார். அப்போது ஒற்றை தலைமை ஓபிஎஸ் என தொண்டர்கள் முழக்கமிட்டனர்
அமைதி காக்கவும்:
இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரையும் தயவுசெய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 15, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்