சாட்டை துரைமுருகன் விவகாரம் என்ன? நாம் தமிழர் கட்சிக்கு சம்பந்தம் இல்லை- சுதாரித்த சீமான்!
NTK Seeman- Sattai Duraimurugan: நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சீமான் தெரிவித்துள்ளார். என்ன நடந்தது?

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து வரும் சாட்டை துரைமுருகன், கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர், சாட்டை என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் கட்சி சார்ந்த கருத்துகளை பேசி வருவார். மேலும், எதிர்க் கட்சிகள் குறித்தும், அதில் கடுமையான விமர்சனங்களை வைத்தும் வருகிறார். இதில், முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
மேலும், தற்போது வருண்குமார் ஐ.பி.எஸ்-க்கும் , சீமானுக்கும் இடையிலான மோதலானது தீவிரமடைந்து நீதிமன்றம் வரை சென்று விட்டது. அப்போது, சாட்டை துரைமுருகன் தன்னை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், இதற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் ஆதராவாக பேசியதுதான் பிரச்னை ஆரம்பிக்க முதற்காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று சாட்டை துரைமுருகன் அவரது யூடியூப் சேனலில், நித்தியானந்தா பேசும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசும் நித்தியானந்தா சாட்டை துரைமுருகன் பெயரை குறிப்பிடுவதையும், இவரது கேள்விகளுக்கு பதில் அளிப்பதையும் பார்க்க முடிகிறது. இது விளம்பர நோக்கத்தின் அடிப்படையிலும், வணிக ரீதியின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
சாட்டை துரைமுருகனின் கருத்துகளானது, நாம் தமிழர் கட்சியின் கருத்துகளாக பார்க்கப்பட்ட வந்த நிலையில், வருண்குமார் உள்ளிட்ட சர்ச்சை கருத்துகளானது சீமானுக்கு பெரிதும் சிக்கலையே ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில், தற்போது நித்தியானந்தா வீடியோ வெளியாகியிருப்பது , நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடாக பார்க்கப்படுவதாக கருத்துகள் எழுந்தன.
மேலும், இது தொடர்பாக சீமானிடம் கூறவில்லை என்றும் தெரிவிக்கவில்லை என்றும், இதுபோன்று பல விசயங்களை சீமானின் அனுமதியின்றி சாட்டை துரைமுருகன் கருத்துகளை தெரிவித்து விடுகிறார். ஆனால், அது சீமானின் தலையில்தான் வந்து நிற்பதால், சீமானுக்கும் கட்சிக்குமே பாதகாமாக அமைந்து விடுகிறது என பேசப்படுகிறது.
இந்நிலையில்தான், தற்போது சாட்டை துரைமுருகன் நடத்தும் சேனலுக்கும் , நாம் தமிழர் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இதற்கு முன்பு மூன்று முறை கட்சி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவர் கட்சியிலிருந்து 3 முறை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் , சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை என்றும், இது அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் பார்க்கப்படுகிறது.

