“புதிய மொழி கற்றால் தமிழ் அழியுமா? தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது” - தமிழிசை சௌந்தரராஜன்
சிலர் நாடாண்டு கொண்டிருக்கையில் அவர்களை சோதனை செய்ய வந்தால் அவர்களுக்கு நெஞ்சு வலியே வந்துவிடுகிறது - ஆளுநர் தமிழிசை
விழுப்புரம் : ”புதிய கல்வி கொள்கை தாய் மொழியை விடுங்கள் என்று கூறவில்லை மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறது. மற்றொரு மொழியை கற்றுக்கொள்வதால் தமிழ் மொழி அழியாது. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது” என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கம்பன் கழகம் சார்பில் மகாராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 40 ஆம் ஆண்டு கம்பன் விழா இன்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. கம்பன் விழாவினை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ”தமிழை போற்றி கொண்டாடியதால் தான் இன்று நான் ஆளுநராக உள்ளேன். தமிழ் இல்லாமல் ஆன்மீகம் இல்லை என்பதை கம்பன் வலியுறுத்தி உள்ளார். தமிழும் ஆன்மிகமும் பிரிக்க முடியாது என்பதை கம்ப ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், அரசு எப்படி இருக்க வேண்டும், மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை கம்பன் கம்பராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.
மேலும், இன்றைய காலகட்டத்தில் சிலர் நாடாண்டு கொண்டிருக்கையில் அவர்களை சோதனை செய்ய வந்தால் அவர்களுக்கு நெஞ்சு வலியே வந்துவிடுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக சாடினார். ”லஞ்சம் ஒழிக்க பட வேண்டும். நேர்மையான நிர்வாகம் இருக்க வேண்டும். அரசாங்கம் எப்படி இருக்க வேண்டுமென கம்பன் வலியுறுத்திறுத்தி உள்ளார். புதிய கல்வி கொள்கை தாய் மொழியை விடுங்கள் என்று கூறவில்லை. மற்றொரு மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறது. கம்பன் வடமொழியை கற்றுக்கொண்டதால் தான் ராமகாவியம் படைக்கப்பட்டுள்ளது. அவர் அதனை கற்றுகொள்ளவில்லை என்றால் கம்ப ராமாயணம் கிடைத்திருக்காது” என கூறினார்.
மற்றொரு மொழியை கற்றுக்கொள்வதால் தமிழ் மொழி அழியாது. தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது என கூறிய அவர், தமிழ் கற்றதினால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றதினால் தமிழ் பேசுவதாக தெரிவித்தார். மேலும் கம்பன் விழாவினை அரசே எடுத்து அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென தமிழிசை செளந்தரராஜன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்