Minister Senthil Balaji: சட்டவிரோதமில்லை.. அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது ஏன்? - அமலாக்கத்துறை விளக்கம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் போது, சட்டத்தை மீறவில்லை என அமலாக்கத்துறை சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் போது, சட்டத்தை மீறவில்லை என அமலாக்கத்துறை சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறப்பட்டதாகவும், சட்டப்படி அவர் கைது செய்யப்படவில்லை எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அமலாக்கத்துறை பதில் மனுதாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, அவரது உறவினர்களுக்கு குறுஞ் செய்தி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய நேர்ந்தது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன்னர் அவரிடம் சம்மன் கொடுக்கப்பட்டது ஆனால் அவர் அதனை பெற மறுத்தார். மேலும், அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் தான் அவரை கைது செய்தோம். மேலும், அவரை கைது செய்யும் முன்னர் சட்டவிரோதமாக அவரை அமலாக்கத்துறை சிறை பிடிக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் பெரும் தொகை தனது வங்கிக் கணக்கிற்கு எங்கிருந்து டெபாசிட் செய்யப்பட்டது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கு காரணங்கள் உள்ளது என்றும், அவர் சாட்சியங்களை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளததால் தான் அவரை நாங்கள் கைது செய்தோம் எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரை விசாரிக்க அவகாசம் வழங்கவேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி சுமார் 17 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் 7-வது தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, 4-வது தளத்தில் உள்ள அறை எண் 435-க்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மாற்றப்பட்டுள்ளார். செந்தில்பாலாஜியின் உடல்நிலை தொடர் கண்காணிப்பில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர் முத்துச்சாமிக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதனால் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கிறார்.