நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது, வராத கோபம் 2 வரியை தூக்கியதற்கு கோபம் வருகிறதா என சீமான் தெரிவித்துள்ளார்.
இந்தி மாத கொண்டாட்டம்:
சென்னை டிடி தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டது.
இதனால், தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பதிலளித்தார்.
ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை முன்வைப்பது துரதிர்ஷ்டவசமானது என ஆளுநர் மாளிகை தெரிவித்துளது.
முதல்வருக்கு ஆளுநர் தரப்பு பதில்:
இதுகுறித்து ஆளுநர் தரப்பு தெரிவித்ததாவது "முதல்வர் ஸ்டாலின் எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு, நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் .
ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும் என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் தரப்பிற்கு கேள்வி
இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது “ தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?
‘பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவறைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?
'ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது' எனச் சொல்லியிருக்கிறீர்கள். ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்:
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது “ நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது. ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது, வராத கோபம் 2 வரியை தூக்கியதற்கு கோபம் வருகிறதா என சீமான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.