Hijab Row | 'இறைவன் நாமம் எப்போது வெறிக்கூச்சல் கோஷமானது?' - ஹிஜாப் விவகாரத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வி..
”இது நல்லதுக்கான தொடக்கமா? அல்லது சிதறி சின்னாபின்னமாகப் போவதின் அறிகுறியா?” - ஜேம்ஸ் வசந்தன்
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை முற்றுகையிட்ட மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்ப, மாணவி அல்லாஹு அக்பர் என்று கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த விவகாரம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதில், 'இஸ்லாமிய மாணவியர் பள்ளி, கல்லூரிக்கு 'ஹிஜாப்' அணிந்துவரக்கூடாது' என்கிற கர்நாடக மாநில அரசின் ஆணையால் அங்கு மாணவ சமூகத்தில் கலகங்களும், போராட்டங்களும் தொடங்கிவிட்டன. மற்றவரிடையே இந்த ஆணை சரியா, தவறா என்கிற விவாதமும் தொடங்கிவிட்டது. தலை, முகம், உடல் என முழுவதும் மறைக்கிற உடை 'புர்கா'. முகத்தை மறைக்காமல், தலைமுடி மற்றும் கழுத்தை மறைத்து தோள் வரை தொங்குகிற Scarf-தான் 'ஹிஜாப்'. இதை ஆண்களும் அணிவதுண்டு; அணியவேண்டும் என்கிறது இஸ்லாம்.
இப்போது கர்நாடக அரசாங்கம் விதித்திருக்கும் தடை சரியா? தவறா? பள்ளிகளில் சீருடை அணியும் பழக்கம் உலகளாவியது. அதனுடைய அடிப்படை நோக்கம் என்ன? சீர் தன்மை.
எதற்கு அது? பணக்காரன், ஏழை பாகுபாடு, சாதி, மத வேறுபாடு, கலாச்சார மாறுபாடு போன்றவை வெளீப்படையாக தோற்றத்திலேயே தெரியக்கூடாது.. எந்தவித வேறுபாடுமின்றி எல்லோரும் சமமாகப் பார்க்கப்பட வேண்டும், சமத்துவமாகப் பழகவேண்டும் என்பதற்காக. அதுதானே கல்வியின் முதல் நோக்கம்!
அந்தக் கோணத்தில் பார்த்தால் தடை சரிதானே? அது சரி. ஆனால், ஏன் 2022 ஜனவரி மாதம் வரை இந்த சீர் தன்மை, சமத்துவ எண்ணம் இல்லாமல் இருந்தது? இன்று எங்கிருந்து திடீரென ஒழுக்கம், கட்டுப்பாடு சிந்தனை வந்தது? ஒரு சாரார் இப்படி தங்கள் மத கோட்பாடின்படி உடையணிந்தது வந்ததால் எங்கு அமைதி குலைந்தது? என்ன பிரச்சனை வந்தது? யாருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது?
அந்தந்த மதத்தினரின் பழக்கவழக்கங்களைப் பார்த்து விளங்கிக்கொண்டு, அதை ஒரு பொருட்டாகக் கூட கருதாமல்தானே 75 வருடங்களாக ஒற்றுமையாக, ஒன்றாக இந்த பரந்து விரிந்த வேறுபாடுகளின் சங்கமமான இந்தியக் குடியரசு திகழ்ந்து வந்தது?
இன்று 17, 18 வயது இளஞ்சிறாரெல்லாம் காவித்துணி அணிந்துகொண்டு பக்தி வழிபாட்டிலும், சன்மார்க்கக் கூட்டங்களிலும் மட்டுமே ஒலிக்கவேண்டிய இறை முழக்கங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் தொண்டை நரம்பு தெறிக்க கத்திக்கொண்டு ஓடுகிறானே.. ஏன்? இறைவன் நாமம் எப்போது வெறிக்கூச்சல் கோஷமானது?
அவனைக் கறைபடுத்தியது யார்? இறைவன் பெயரை உச்சரித்தால் மனம் அமைதிபடும், ஒருமனதாய் வழிபடுகிற கூட்டமே சாந்தப்படும் என்கிற இறை தத்துவங்களைக் குலைத்து அவனுக்கு நேரெதிராய் போதித்து அவனை மூர்க்கனாக்கியவர் யார்? மதவேறுபாட்டுத் தோற்றங்களை கல்வி நிறுவனங்களில் தடை செய்வது ஒருவகையில் நல்லதுதான். அப்படியானால் கிறிஸ்தவ மாணவ மானவியர் சிலுவை போட்ட நகைகளை அணிவதும், இந்துக்கள் நெற்றியில் திருநீறு அணிவதும், பிராமணர் பட்டை அணிவதும், ஒற்றைக்கோடு, மூன்றுகோடு நாமங்கள் அணிவதும், மற்றும் பிற நம்பிக்கைகளைக் கொண்டவர்க்கு ஏதேனும் இருப்பின் அவைகளும் தடைசெய்யப்பட வேண்டுமல்லவா?
இது நல்லதுக்கான தொடக்கமா? அல்லது சிதறி சின்னாபின்னமாகப் போவதின் அறிகுறியா?’ என பதிவிட்டிருக்கிறார்.