Nainar Nagendran: அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு - நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
'என்னை பொறுத்தவரை அகில இந்திய அளவில் 2024 தேர்தலில் வென்று பிரதமராக நரேந்திர மோடி வருவார். அதன் பின்பு வரும் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த யார் வந்தாலும் மிகுந்த மகிழ்ச்சி'
நெல்லை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் பாஜக தமிழக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, இது மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு. உச்சநீதிமன்றம் உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில குற்றப்பிரிவு காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுத்தும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, அதன் பிறகு உச்ச நீதிமன்றம் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய வருமான வரித்துறை என இரண்டு நிறுவனங்களுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
ஏற்கனவே வருமான வரித்துறை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் சோதனை செய்தது. அதன் அடிப்படையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதிமுக ஆட்சி நடக்கும் பொழுது வருமானவரித்துறை அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் சோதனை செய்தபோது என்ன சொன்னார்கள் அப்போது சொன்னது வேறு, இப்போது சொல்வது வேறு, ஒரே நாக்கு இரண்டு பதில்களை தருகிறது. தற்போதைய தமிழக முதலமைச்சரே செந்தில் பாலாஜி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அமித்ஷா வந்ததற்கும் தற்போது உள்ள நடவடிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக - பாஜக கட்சி இடையே பேச்சளவில் கருத்து வேறுபாடு வந்துள்ளது. கூட்டணிக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பத்திரிகையாளர்களின் கேள்விக்கு மாநில தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் குறித்த தகவல்களை பதிவு செய்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக எந்த கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வேண்டும் வேண்டாம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை 3 பேரும் சேர்ந்து தான் முடிவு எடுப்பார்கள்.
அதிமுக பொதுச் செயலாளரும், பிரதமர், அமித்ஷா, ஜே.பி நட்டா ஆகியோர் கூட்டாக சேர்ந்து தான் முடிவெடுக்க முடியும். எந்தெந்த தொகுதிகள் வேண்டும் என்று தான் வேலை செய்யலாம். இறுதி முடிவை கூட்டணி தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழகத்தில், தமிழர்கள் பிரதமராக வரும் வாய்ப்பு இருந்தது. உங்களுக்கு தெரியும், அது எப்படி தவறி போனது என்பதை அனைவருக்கும் தெரியும். என்னை பொறுத்தவரை அகில இந்திய அளவில் 2024 தேர்தலில் வென்று பிரதமராக நரேந்திர மோடி வருவார். அதன் பின்பு வரும் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த யார் வந்தாலும் மிகுந்த மகிழ்ச்சி. தலைமை அனுமதித்தால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுவேன். அதிமுக - பாஜக கூட்டணி என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்று. எந்த நேரத்தில் யார் வேட்பாளராக அறிவித்தாலும் ஒருங்கிணைந்து வெற்றிக்கான பணிகளை செய்வோம். நாள்தோறும் கட்சினர் ஒவ்வொருவர் சொல்லும் வார்த்தையை வைத்து கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்