தெர்மாகோல் திட்டத்தை நான் கண்டுபிடிக்கவில்லை – அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
தெர்மாகோல் திட்டத்தை நான் கண்டுபிடிக்கவில்லை என்றும், அதிகாரிகள் கூறியதால்தான் அந்த திட்டத்தை திறந்து வைத்ததாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். அவர் இன்று தனது தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போதும், அவர் பேசும்போது, மதுரை மக்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்களுக்காகத் தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. நான் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. தலைவர்களால் மறக்க முடியாது.
என்னுடைய துறையைப் பற்றி, என்னைப் பற்றி ஸ்டாலின் உட்பட தி.மு.க. தலைவர்கள் யாரும் குறைசொல்ல முடியாது. என்னை யாரும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு நடந்திருக்கிறேன். தி.மு.க.வினர் என்னை கேலி, கிண்டல் பேசுவார்கள். தெர்மாகோல் திட்டத்தை நான் கண்டுபிடிக்கவில்லை. அதிகாரிகள் சொல்லி நான் திறந்து வைத்தேன். ஆனால், தெர்மாகோல் ராஜூ என இன்று உலகம் பூராவும் பரவ வைத்துவிட்டார்கள்.
மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்பட எல்லோரும் இதுகுறித்துப் பேசுகின்றனர். ஆனால், எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. அதே நேரத்தில் நான் தவறு செய்தேன் என்று எங்கேயும் தி.மு.க.வினரால் சொல்லிவிட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.