'தமிழகத்தை திராவிடமாடல் மட்டும் தான் ஆட்சி செய்யமுடியும்' - அமைச்சர் கே.என்.நேரு
தமிழக முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ? அவர்தான் பிரதமராக அமரப்போகிறார் என்றும் தயாநிதிமாறன் உரையாற்றினார்.
சேலம் மாநகர் குரங்குசாவடி பகுதியில் திராவிட மாடல் ஆட்சியில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு விழா பேரூரை ஆற்றினர்.
நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் பெருமளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி சவால்விட்டு பேசினார். ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் திராவிட மாடல் காலாவதியான கோஷம் என ஆளுநர் பேசிவருகிறார். ஆனால் தமிழகத்தை திராவிட மாடல் மட்டும் தான் ஆட்சி செய்ய முடியும். அடுத்த முறையும் திமுக தலைவர் ஸ்டாலின் தான் ஆட்சி அமைப்பார் என உறுதிப்பட தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசியவர், விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம், மாநிலத்திற்கு என தனிகல்வி கொள்கை உள்ளிட்ட என பல்வேறு திமுக செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அவர், அரசு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அமைச்சர்களுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே படித்துவிட்டு வேலை இல்லாதவர்களுக்கு அரசு பணி இதன் மூலம் படிப்படியாக கிடைக்கும் என்று கூறினார். சேலத்தில் ஜவுளி பூங்கா வேண்டும் என 20 ஆண்டு காலமாக இருந்து வந்த நிலையில் தற்போது 200 கோடி ரூபாய் செலவில் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் 540 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டமும், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைக்கும் திட்டமும், திருமணிமுத்தாற்றை திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.சேலம் மாவட்டத்தை மீண்டும் திமுகவின் கோட்டையாக மாற்றுவோம் வீரபாண்டிய காலத்தில் எப்படி திமுக இயக்கம் இருந்ததோ வருங்காலத்தில் முக்காவாசி சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவினராக வருவார்கள் எனவும் உறுதிப்பட பேசினார்.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உரையாற்றினார். அப்போது பேசியது, திராவிட மாடல் ஆட்சி என்பது சொல்வதை செய்வது மட்டும் அல்ல, சொல்லாததையும் செய்வதுதான் திராவிட மாடலா ஆட்சி,அதைதான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இதுபலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் இந்த ஆட்சியின் மீது ஏதாவது ஒரு புரளியை கிளப்பிவிடலாம் என நினைக்கிறார்கள். தமிழக முதல்வர் ஆட்சி அமைத்தபோது தமிழகத்தில் கடுமையான கடுமையான கொரோனா பாதிப்பு இருந்தது. அப்போது விலையில்லா தடுப்பூசி கொடுத்து கொரோனாவில் இருந்து மக்களை தமிழக முதல்வர் பாதுகாத்தார். கொரோனாவால் வேலை இழந்து நின்ற நிலையில் குடும்பத்திற்கு நான்காயிரம் வழங்கினார் என்று கூறிய தயாநிதி மாறன், திராவிட திராவிட மாடல் ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. 2019 ஜனவரி மாதம் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஒரே ஒரு செங்கலை மட்டும் வைத்துவிட்டு சென்றனர். இதுவரை எந்த கட்டிடமும் கட்டப்படவில்லை இதுதான் சனாதானா ஆட்சி. ஆனால் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார் என்று பெருமிதத்துடன் கூறினார். இதைதொடர்ந்து கூறியவர் பாஜக ஆட்சி பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இல்லை. டெல்லியில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலின்போது இலவசம் கொடுத்து நாடு கெட்டுவிட்டது, இலவசத்தால் மக்களைக் கெடுத்துவிட்டன என பிரதமர் மோடி பேசினார். இந்தியாவில் இலவசம் கூடாது இலவசத்தை ஆதரிக்கமாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். தற்போது கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜகவினர் மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக தருவதாகவும், மக்களுக்கு 2000 தருவதாகவும் வாக்குறுதிகளை வீசி வருகின்றனர் என்று விமர்சனம் செய்தார். அப்போது வடிவேலு பாணியில் அது வேற வாய், இது நாற வாய் என்று கிண்டலடித்தார். நாம் கொடுத்தால் இலவசம் ஆனால் பாஜக கொடுத்தால் மக்கள் நலனா என கேள்வி எழுப்பினார். தமிழகம் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் பிறந்த மண், முதல்வர் ஸ்டாலின் ஆளுகின்ற மண் இங்கு யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றார் உயர்ந்த ஜாதியினர் மட்டும்தான் படிக்க வேண்டும், முன்வர முன்னுக்கு வரவேண்டும் என்பது தமிழகத்தில் நடக்காது ஏனென்றால் பெரியார், அண்ணா, கருணாநிதி பிறந்த மண் இது பெருமிதம் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 என்ற எண்ணிக்கையில் வெற்றி பெற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் பிரதமராக அமரப் போகிறார் என்றும் பேசினார்.